Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் புதிய மருத்துவக் காப்பீடு மூலம் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற முடியும் என சுகாதாரத் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அரசாணை: அரசு ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர், ஓய்வூதியர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில், தமிழக அரசு புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ஆணையிட்டது.

அதில், அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2021ம் ஆண்டு முதல் 30 ஜூன் 2025ம் ஆண்டு வரையிலும், ஓய்வூதியர்களுக்கு 1ஜூலை 2022ம் ஆண்டு முதல் 30 ஜூன் 2026ம் ஆண்டு வரையிலும் தொடர்ந்து 4 ஆண்டுகள் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த திட்டம் மூலம் 5 லட்சம் வரையிலும் குறிப்பிட்ட நோய்களுக்கு ரூ.10 லட்சம் வரை மருத்துவ உதவி பெற முடியும்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை பெறும்வகையில், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான பொது மற்றும் நிதி வழிகாட்டு முறைகளைச் சமர்ப்பித்து, அவற்றுக்கு ஒப்புதல் வழங்குமாறு தமிழ்நாடு சுகாதாரத் திட்ட மாநில இயக்குநர், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த வழிகாட்டு முறைகளுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

எனவே, மருத்துவ சிகிச்சை பெற விரும்புவோர், மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையுடன், சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையில் இதற்கென பணியில் இருக்கும் ஒருங்கிணைப்பு அலுவலரை அணுக வேண்டும். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான முன் அனுமதி பெற்ற பின்னர், சிகிச்சையை தொடங்க வேண்டும்.

எனினும், எதிர்பாராத சூழல் ஏற்பட்டால், மருத்துவ சிகிச்சையை உடனடியாக தொடங்கி, பின்னர் அடுத்த 48 மணி நேரத்துக்குள் முன் அனுமதி மற்றும் தேவையான இதர ஆவணங்களைப் பெற வேண்டும். நோய்களுக்கு மட்டுமின்றி அறுவை சிகிச்சைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம், அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து கட்டண படுக்கை பிரிவுகளில், இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறும் வசதிகள் உள்ளன.