எல்லா நோய்களுக்கும் சிகிச்சை பெறமுடியும்; மருத்துவ காப்பீட்டில் வயது வரம்பு நீக்கம்: புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் விதிகள் அறிவிப்பு
புதுடெல்லி: எல்லா நோய்களுக்கும் சிகிச்சை வழங்கும் வகையிலும், மருத்துவ காப்பீட்டில் வயது வரம்பு முறையை ரத்து செய்தும், புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) வெளியிட்ட அறிவிப்பில், ‘அதிகரித்து வரும் மருத்துவ செலவுகளைக் கருத்தில் கொண்டு, அனைத்து பிரிவினருக்கும் வயது வித்தியாசமின்றி சிறந்த சிகிச்சை அளிப்பதற்காக கடந்த 1ம் தேதி முதல் சில நிபந்தனைகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கான 65 வயது வரம்பு தளர்த்தப்படுகிறது. அதனால் எந்த வயதினரும் மருத்துவ காப்பீடு பெறமுடியும். பல்வேறு வயதினருக்கும் காப்பீடு தடையின்றி கிடைப்பதை சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். மூத்த குடிமக்கள், மாணவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் போன்றவற்றுக்கு தனியான கொள்கைகளை காப்பீடு நிறுவனங்கள் உருவாக்கி கொள்ளலாம். எந்த வகையான நோய்களுக்கும் காப்பீடு வசதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
குறிப்பாக புற்றுநோய், இதய நோய், சிறுநீரக நோய், எய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாலிசியை மறுக்கக் கூடாது. காப்பீட்டு பிரீமியத்தை தவணை முறையில் செலுத்த வசதிகள் செய்து தர வேண்டும். பொது மற்றும் சுகாதார காப்பீட்டு சேவைகளை வழங்கும் நிறுவனங்களால் மட்டுமே, பயணக் காப்பீட்டுக் கொள்கைகளை வழங்க முடியும். ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் சிகிச்சை முறைகளுக்கு வரம்பு நிர்ணயம் இல்லை. மூத்த குடிமக்களின் புகார்களைத் தீர்க்க சிறப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.