Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரயில் விபத்துகள் 90% குறைந்துள்ளன: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

புதுடெல்லி: அண்டை நாடுகளை விட இந்தியாவில் ரயில் கட்டணங்கள் குறைவாக உள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். மக்களவையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான ரயில்வே மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். அப்போது பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “கொரோனா தொற்று நோய் பாதிப்புகளிலிருந்து தேசிய போக்குவரத்து நிறுவனமான ரயில்வே தன் சொந்த செலவுகளை சமாளிக்க மீண்டு வந்துள்ளது” என்றார்.

அப்போது டெல்லி ரயில் நிலையத்தில் மகாகும்பமேளா கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஒரே ஆண்டில் 234 விபத்துகள் நடந்துள்ளன. 464 ரயில்கள் தடம் புரண்டன. ஒரு வருடத்தில் சுமார் 700 ரயில் விபத்துகள் நடந்தன. மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்தபோது 165 விபத்துகள் நடந்தன. 230 ரயில்கள் தடம் புரண்டன. ஒரு வருடத்தில் 395 விபத்துகள் நடந்தன.

இதேபோல் மல்லிகார்ஜூன கார்கே ரயில்வே அமைச்சராக பதவி வகித்தபோது 118 ரயில் விபத்துகள் நடந்தன. 263 ரயில் தடம் புரண்ட விபத்துகளும், மொத்த ரயில் விபத்துகளின் எண்ணிக்கை 381 ஆக இருந்தது. தற்போது ரயில் விபத்துகள் 30ஆகவும், ரயில் தடம் புரளும் சம்பவங்கள் 43ஆக குறைந்துள்ளன. 2014-15ம் ஆண்டில் இருந்ததை விட ரயில் விபத்துகள் 80 சதவீதம் குறைந்துள்ளன. மொத்தமாக விபத்துகளின் எண்ணிக்கை 90 சதவீதமாக குறைந்துள்ளது” என விளக்கமளித்தார்.

தொடர்ந்து பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “கடந்த 2020ம் ஆண்டு முதல் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் ரயில் கட்டணம் மிகக்குறைவு. இந்தியாவில் 350கிமீ பயணத்துக்கு ரூ.121 கட்டணம். இது பாகிஸ்தானில் ரூ.436, இலங்கையில் ரூ.413, வங்கதேசத்தில் ரூ.323 வசூலிக்கப்படுகிறது. இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஐரோப்பிய நாடுகளிலும் ரயில்வே கட்டணங்கள் அதிகம்” என இவ்வாறு பட்டியலிட்டார்.