Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குன்னூரில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

*வாகன ஓட்டிகள் திணறல்

குன்னூர் : குன்னூரில் தொடரும் போக்குவரத்து நெரிசல், கார் பார்க்கிங் தளத்தில் கட்டுமான பொருட்கள் இறக்கப்பட்டதால் உள்ளூர் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இங்கு இங்கு வந்து செல்கின்றனர்.

குறிப்பாக கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் தங்களது சொந்த வாகனங்களில் அதிகமாக வந்து செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இதனால் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக குன்னூர் நகரில் சுற்றுலா வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களை நிறுத்த போதிய பார்க்கிங் வசதி இல்லாததால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மேலும் நீலகிரியின் நுழைவு வாயிலில் உள்ள குன்னூர் பகுதிகளில் உள்ள பல்வேறு சாலைகள் மிகவும் குறுகலான பாதையாக உள்ளதால், வாகனங்களை நிறுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் பார்க்கிங் பிரச்சினை பெரும் பிரச்னையாக உள்ளது.

மேலும் உள்ளுர் வாகன ஓட்டிகள், பல்வேறு பகுதிகளில் உள்ள பயன்பாட்டில் இல்லாத சாலையோர இடத்தில் பார்க்கிங் ஏற்படுத்தி, உள்ளுர் வாகன ஓட்டிகளுக்கும், சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கும் வாகனங்கள் நிறுத்துவதற்கு வழிவகை செய்து பெரும் சிரமத்தை குறைத்தனர்.

இருந்த போதிலும் குன்னூர் அருகே சாமண்ணா பூங்கா அருகே ஏற்படுத்தப்பட்ட கார் பார்க்கிங் இடத்தில் சுமார் 15 கார்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இரயில்வே சாலையின் கட்டுமான பணிக்காக குன்னூர் - உதகை பிரதான சாலையோரத்தில் கட்டுமான பொருட்களான ஜல்லி மற்றும் சிமெண்ட்கள் கொட்டப்பட்டுள்ளதால் உள்ளுர் வாகன ஓட்டிகளும், சுற்றுலா வாகன ஓட்டிகளும் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் கார்களை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாததால் சாலையோரத்தில் கார்களை நிறுத்தி செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவ்வபோது போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை அகற்றினால் மட்டுமே பெரும்பாலான போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கலாம் என சுற்றுலா வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.