ஆர்ப்பரித்து கொட்டுகிறது தண்ணீர்; சுருளி அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: இதமான சூழலில் ஜில் குளியல்
கம்பம்: சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. தேனி மாவட்டம், கம்பம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சுருளி அருவிப் பகுதியானது பிரபலமான சுற்றுலா இடமாக உள்ளது. மேலும் அருகே பூத நாராயணர் கோயில், சுருளி வேலப்பர் கோயில்கள் உள்ளன. முன்னோர் வழிபாட்டுக்கு முக்கிய இடங்களில் ஒன்றாகவும் உள்ளது. இதனால் ஆன்மீக தலமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் இங்கு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின்னர், கேரள பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அருவிக்கு தொடர்ச்சியாக தண்ணீர் வரத்து உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அரிசி பாறை, ஈத்தக்காடு, மேகமலை வனப்பகுதி மற்றும் தூவானம் அணை போன்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் சுருளி அருவிக்கு வருகிறது. தற்போது அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது இதமான காலநிலை காணப்படுகிறது. இதனால் அருவியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்கள் அருவியில் ஆரவாரமாக குளித்து மகிழ்கின்றனர். அதிக அளவில் கூட்டம் இருப்பதால் பயணிகள் காத்திருந்து குளித்து வருகின்றனர். வனத்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்தி பயணிகளை குளிப்பதற்கு அனுமதித்து வருகின்றனர். மேலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


