Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாட்டர் ஏடிஎம்.களில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி

ஊட்டி: நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள வாட்டர் ஏடிஎம்.,கள் பழுதடைந்தும், சுகாதாரமின்றியும் காட்சியளிக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தின் இயற்கை அழகையும்,சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்கில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள்,குளிர்பானங்கள் விற்பனை செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவையடுத்து கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்து உள்ள அனைத்து கடைகள், வணிக வளாகங்களில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், உணவு பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குடிநீர் பெற ஏதுவாக மாவட்டத்தின் நெடுஞ்சாலைகள், சுற்றுலா தலங்கள், பொது இடங்களில் சுத்திகரிக்கும் குடிநீர் எந்திரங்கள் (வாட்டர் ஏடிஎம்.,) அமைக்கப்பட்டன. இவை 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

ஆரம்ப காலங்களில் முறையாக செயல்பட்டு வந்தன. ஆனால் கால போக்கில் முறையான பராமரிப்பு இல்லாததால் 90 சதவீத வாட்டர் ஏடிஎம்.,கள் தண்ணீரின்றி பழுதடைந்து காட்சியளிக்கின்றன.பல வாட்டர் ஏடிஎம்.,கள் பழுதடைந்துள்ளதுடன், சுகாதாரமின்றி உள்ளது. இதனால் அவற்றில் தண்ணீர் பிடித்து அருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தயங்குகின்றனர்.

மேலும் நீலகிரி மாவட்டம் முழுவதும் குளிரான காலநிலை நிலவுகிறது.வாட்டர் ஏடிஎம்.,களில் வரக் கூடிய குளிர்ந்த நீரை பிடித்து அருந்த பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே வாட்டர் ஏடிஎம்.,களை சரி செய்வதுடன், அவற்றில் சுடுநீர் வருவதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.