Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்றிரவு கோலாகல நிறைவு விழா: பதக்க பட்டியலில் முதலிடத்திற்கு சீனா-அமெரிக்கா போட்டி

பாரிஸ்: 33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தொடக்க விழா விளையாட்டு அரங்கில் நடைபெறாமல் பாரிஸ் நகரின் முக்கிய அடையாளமான சீன் நதியில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. ஒலிம்பிக்கில் 42 வகையான விளையாட்டுகளில், 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இந்தியாவில் இருந்து 16 வகையான விளையாட்டுகளில் 112 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். இதில் இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனுபாக்கர், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் சரப்ஜோத் சிங்-மனுபாக்கர், ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் ஸ்வப்னில் குசாலே, ஆடவர் ஹாக்கி, மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர். ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். கடந்த 16 நாட்களாக நடைபெற்ற வந்த ஒலிம்பிக் திருவிழா இன்றுடன் முடிவடைகிறது. நிறைவு நாளான இன்று மகளிருக்கான மராத்தான், ஆடவர், மகளிருக்கான வாலிபால், மகளிர் கூடைப்பந்து உள்ளிட்ட 13 தங்கப் பதக்கங்களுக்கான போட்டி நடைபெறுகிறது.

பதக்கங்களுக்கான அனைத்து போட்டிகளும் முடிவடைந்த பின்னர் இரவு 12.30 மணி அளவில் பிரம்மாண்டான நிறைவு விழா 80 ஆயிரம் பேர் அமரக்கூடிய தி ஸ்டேட் டி பிரான்ஸ் ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடைபெறும் அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியை மனு பாக்கர், ஜேஷும் ஏந்திச் செல்கின்றனர். நிறைவு விழாவின் இறுதியில் ஒலிம்பிக் கொடி இறக்கப்பட்டு அடுத்த ஒலிம்பிக் (2028) நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் போட்டி அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படும். நிறைவு விழாவில் ஹாலிவுட் நட்சத்திரமான டாம் க்ரூஸ், அமெரிக்க பாடகியான கேப்ரியெல்லா சர்மியெண்டோ வில்சன் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கடந்த ஒலிம்பிக்கில் 7 பதக்கம் வென்ற இந்தியா இந்த முறை 6 பதக்கமே வென்றுள்ளது. பதக்க பட்டியலில் முதல் இடத்திற்கு சீனா-அமெரிக்கா இடையே கடும் போட்டி உள்ளது. தற்போது சீனா 39 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என 90 பதக்கம் வென்று முதலிடத்திலும், அமெரிக்கா 38 தங்கம், 42 வெள்ளி, 42 வெண்கலம் என 122 பதக்கத்துடன் 2வது இடத்திலும் உள்ளன. இன்று அமெரிக்கா சில போட்டிகளில் களம் இறங்குவதால் முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.