முறையான சாலை பராமரிப்பு மேற்கொள்ளாமல் சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணங்களை உயர்த்துவதா?.. மமக தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம்
சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில்அமைந்துள்ள கப்பலூர், எட்டுராவட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சுங்கச்சாவடிகளுக்குத் தமிழ்நாடு அரசின் நிலுவைத் தொகை 276 கோடி செலுத்தாமல் இருப்பதால் நான்கு சுங்கச்சாவடி நிறுவனங்களும் நீதிமன்றத்தின் கதவைத் தட்டி இருக்கின்றன. இந்த நான்கு சுங்கச்சாவடிகளிலும் இன்று முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி ஒன்றிய அரசு மாநில அரசுகளும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கோரிக்கையும் போராட்டமும் நடத்தியுள்ள நிலையில் அது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. ஆனால் பொதுமக்களின் போக்குவரத்தைப் பாதிக்கும் வகையில் சுங்கச்சாவடி நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடி இருப்பதும் அதன் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட தீர்ப்பும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. சுங்கச்சாவடிகள் என்ற பெயரில் ஆண்டுதோறும் கட்டணங்கள் அதிகப்படுத்திக் கொண்டே செல்வதும் முறையான சாலை பராமரிப்பு மேற்கொள்ளாமல் இருப்பதையும்மக்கள் அனைவரும் அறிந்தே வைத்திருக்கின்றனர்.
ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கு முன்னரும் இருபுறமும் இருக்கும் சாலைகளை செப்பணிட்டு சுங்கச்சாவடிகளுக்குள் நுழையாமல் புற வழியிலேயே வாகனங்கள் செல்லும் சூழ்நிலையைத் தமிழ்நாடு அரசு உருவாக்குவதே இந்த கொள்ளைக்குத் தீர்வாக அமையும் என எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.