Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 1ஏ முதல்நிலை தேர்வு; 72 காலி இடங்களுக்கு 2.49 லட்சம் பேர் போட்டி: 2 மாதத்தில் ரிசல்ட் வெளியிடப்படும் டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் பேட்டி

சென்னை: குரூப் 1, குரூப் 1ஏ பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட 72 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு இன்று காலை நடந்தது. இத்தேர்வை 2.49 லட்சம் பேர் எழுதினர். 2 மாதத்தில் ரிசல்ட் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 1ம் தேதி வெளியிட்டது. இதில் துணை கலெக்டர் 28 இடங்கள், போலீஸ் டிஎஸ்பி 7 இடம், வணிகவரி உதவி ஆணையர் 19, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் 7, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 3, தொழிலாளர் நல உதவி ஆணையர் 6 ஆகிய 70 பணியிடங்கள் அடங்கும். அதோடு உதவி வனப் பாதுகாவலர் 2 காலியிடங்களுக்கான குருப் 1 ஏ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகா மையங்கள் என 44 இடங்களில் தேர்வுகள் நடந்தது.

சென்னையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தி.நகர், கே.கே.நகர், அண்ணாநகர், எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், சைதாப்பேட்டை, திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 170 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் 41,094 பேர் தேர்வு எழுதினர். குரூப் 1, குரூப் 1 ஏ முதல்நிலை தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை நடந்தது. சென்னையை பொறுத்தவரை டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர், எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் எந்தவித பிரச்னையும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. தேர்வு நடைபெற்ற அனைத்து இடங்களிலும் தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவர்கள் தேர்வு எளிதாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர். குரூப் 1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுவோர் அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை ஆய்வு செய்த பின்னர் டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் அளித்த பேட்டி: குரூப் 1, குரூப் 1ஏ தேர்வுக்கான ரிசல்ட் 2 மாதத்தில் வெளியிடப்படும். மெயின் தேர்வு அதில் இருந்து 3 மாதத்திற்குள் நடைபெறும். டின்பிஎஸ்சி கடந்த ஆண்டில் 10 ஆயிரத்து 71 பேருக்கு வேலைவாய்ப்பை கொடுத்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து இன்று வரைக்கும் ஏறக்குறைய 10 ஆயிரத்து 277 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி அறிவிக்கப்படக்கூடிய தேர்வுகள், தற்போது நடந்து கொண்டிருக்கும் தேர்வுகள் இது எல்லாம் முடிந்து இன்னும் ஏறக்குறைய 12,230 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வாய்ப்புள்ளது. இந்த தேர்வுகள் எல்லாம் திட்டமிட்டப்படி குறித்த நேரத்தில் டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்பட்டு, முடிவுகளும் குறித்த நேரத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. இன்றைய தேர்வை பொறுத்தவரை எளிமைப்படுத்தப்பட்ட ஓஎம்ஆர் சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளோம். முன்னர் ஓஎம்ஆர் சீட்டில் சில காம்ப்ளிகேசன் இருந்தது. அதில் உள்ள விதிமுறைகள் தெளிவாக இல்லாமல் இருந்தது.

இந்த முறை விதிமுறைகள் எல்லாம் எளிதாக்கி மாணவர்கள் தங்களின் விடையை எளிதாக பூர்த்தி செய்யும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறோம். அதனால், இது பயனுள்ள முயற்சியாக இருக்கும் என்று கருதுகிறேன். பழைய முறையில் விடைகள் ஏ,பி, சி,டி யில் எவ்வளவு என்று மொத்தமாக போட சொல்லியிருந்தோம். அதற்காக கூடுதலாக 15 நிமிடம் ஆனது. இப்போது அதற்கு பதிலாக அவர்கள் எவ்வளவு கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் விட்டு இருக்கிறார்கள் என்று கேட்டு இருக்கிறோம். இதனால், இதை அவர்கள் குறித்த காலத்திற்குள் முடிக்க முடியும். கடந்த 6 மாத காலமாக தேர்வு திட்டத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்து எளிமைப்படுத்தியிருக்கிறோம். முன்னர் எல்லாம் டிஎன்பிஎஸ்சியில் 95 தேர்வுகள் நடக்கும். தற்போது ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு, ஒருங்கிணைந்த டிப்ளமோ தேர்வு என்று ஒன்றாக சேர்த்து விட்டோம். இதனால், இப்போது 7 தேர்வுகளை தான் நடத்துகிறோம். இதனால், மாணவர்கள் தேர்வுக்கு ஒரே விண்ணப்பம் போட்டால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.