Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழக அரசு குறித்து அமித் ஷா சர்ச்சை பேச்சு: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

கோவை: தமிழக அரசு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமி்த் ஷாவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் மாலை கோவைக்கு வந்தார். நேற்று கோவை பீளமேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாஜ மாவட்டத் தலைமை அலுவலகத்தை பூமாலைகளை வெட்டி திறந்து வைத்தார். விழாவில் கட்சி தொண்டர்கள் மத்தியில் அமித்ஷா பேசியதாவது: உலகின் மிகவும் தொன்மையான மொழியான தமிழிலே என்னால் பேச முடியவில்லை என்பதை வருத்தத்தோடு, மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மக்களின் வாழ்வியல், மொழி வளம், கலாச்சாரம், ஆகியவற்றை மதிக்கக்கூடிய, போற்றக்கூடிய ஒரு தலைவராக மோடி இருக்கிறார். நாடாளுமன்றத்தில் நம் முன்னோர் மூவேந்தர்களின் கையை அலங்கரித்த செங்கோல் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் இருக்கும் பாராளுமன்ற சீட்டுகளில் ஒன்று கூட குறையாது. கூடுதல் தொகுதிகள்தான் கிடைக்கும் என்று பிரதமர் உறுதிப்படுத்தி இருக்கிறார். மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் செய்யாமல் விகிதாச்சார அடிப்படையில் செய்யப்பட்டு, சீட்டுகள் ஒதுக்கப்படும்.

இதில் கூடுதலான சீட்டுகள் கிடைக்குமே தவிர, யாருக்கும் எந்த குறைவும் ஏற்படாது. 2004-14 பத்தாண்டு கால ஆட்சியில், தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு கொடுத்த தொகை, ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 900 ஒரு கோடி ரூபாய். இதைவிட 2014 - 2024 வரையிலான காலத்தில் ஐந்து மடங்கு நிதி அதிகமாக வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அமித்ஷா பேசும்போது தமிழக அரசை விமர்சித்து பேசி, தமிழ்நாட்டில் உள்ள தேச விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பேசினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை நாட்டின் உள்துறை அமைச்சர் தேசிய விரோத ஆட்சி என்று பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.