Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவாரூர் அருகே மத்திய பல்கலைக்கழக விடுதி உணவில் புழு, பூச்சிகள்

*வீடியோ வைரலால் பரபரப்பு

திருவாரூர் : திருவாரூர் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் இயங்கும் இந்த பல்கலைக்கழகத்தில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ஓரிசா, பீகார் உள்ளிட்ட இந்தியா முழுவதும் இருந்து வரும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 2,750 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு படித்து வரும் மாணவர்களில் 75 சதவீதம் பேர், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் அனைவரும் பல்கலைகழக விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

இவர்களுக்காக பல்கலைகழகத்தின் சார்பில் தனியார் நிறுவனம் மூலம் குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழு, பூச்சிகள் கிடந்ததாக சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் கூறுகையில், இதுதொடர்பாக பேராசிரியர்களை கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உணவகத்தில் உள்ள சமயலறை மற்றும் குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. உணவுக்கு பயன்படுத்தப்பட்ட தக்காளியில் புழு இருந்ததை உணவக ஊழியர்கள் கவனிக்காமல் சமைத்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சம்மந்தப்பட்ட அந்த தனியார் நிறுவனத்திடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளதோடு நிறுவனத்துக்கு அபாராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்கில் இதுபோன்று சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.