திருவண்ணாமலையில் இன்று காலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் தொடக்கம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆனி பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனிமாத பிரம்மோற்சவ விழாவும் ஒன்று. சூரியன் தெற்கு திசையை நோக்கி நகரும் காலமான (தட்சிணாயனம்) ஆடிமாதத்தை வரவேற்கும் விதமாக ஆனி பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. அதன்படி ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் இன்று காலை நடந்தது. அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விநாயகர், அண்ணாமலையார் சமேத பிரியாவிடை, உண்ணாமுலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் 3ம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரம் அருகே எழுந்தருளினர்.
6.45 மணி அளவில் வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் பிரம்மோற்சவ கொடியை ஏற்றினர். அப்போது கோயிலில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகா’ என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து விநாயகர், அண்ணாமலையார் சமேத பிரியாவிடை, உண்ணாமுலையம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைதொடர்ந்து உற்சவமூர்த்திகள் அலங்கார ரூபத்தில் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.


