Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருவண்ணாமலையில் திடீர் ஆய்வு அனுமதியில்லாத ஆட்டோக்கள் பறிமுதல்

*போக்குவரத்து நெரிசலை தடுக்க கலெக்டர் அதிரடி உத்தரவு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரம். தென்னகத்து கயிலாயம் என போற்றப்படும் அண்ணாமலையை தரிசிக்க வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது. எனவே, திருவண்ணாமலை நகரம் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கிறது.

எனவே, திருவண்ணாமலை நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, முக்கிய சாலைகள் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளன. கனரக வாகனங்கள் புறவழிச்சாலையில் திருப்பிவிடப்படுகிறது. சுற்றுலா வாகனங்கள் அனைத்தும், அண்ணா நுழைவு வாயில், காந்திநகர் மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், திருவண்ணாமலையில் இயக்கப்படும் ஆட்டோக்களின் ஆவணங்களை வட்டார போக்குவரத்து அலுவலகமும், போக்குவரத்து காவல்துறையும் ஆய்வு செய்து, கியூஆர் கோடு வழங்குகிறது. ஆட்டோக்களில் பயணம் செய்யும் பொதுமக்கள், கியூஆர் கோடை ஸ்கேன் செய்தால், ஆட்டோவின் முழு விபரங்களையும் தெரிந்துகொள்ளலாம். மேலும், ஆட்டோக்களின் கட்டணமும் முறைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனாலும், அனுமதியில்லாத நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள் திருவண்ணாமலையில் இயக்கப்படுகிறது. அதனால், நகரின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறுகலான சாலைகளிலும் ஆட்டோக்கள் குவிந்துவிடுவதால், நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்களில் கடந்து செல்லவும் முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலையில் நேற்று காலை 6 மணியளவில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக கலெக்டர் தர்ப்பகராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பஸ் நிலையம் அருகேயுள்ள ரவுண்டானா சந்திப்பு, பெரியார் சிலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த கலெக்டர், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விதிமீறும் வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

ேமலும், அங்குள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நிறுத்தியிருந்த ஆட்டோக்களில் கியூஆர் கோடு ஒட்டப்படாத ஆட்டோக்கள் உள்ளதா என கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும், அனுமதியில்லாத ஆட்டோக்களை பறிமுதல் செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும், அனைத்து ஆட்டோக்களிலும் பொதுமக்கள் புகார் செய்ய வசதியாக 04175 - 232266 என்ற தொலைபேசி எண் எழுதியிருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.ஆய்வின் போது, திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.