Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பூர் அரசு மருத்துவமனையில் 30 படுக்கையுடன் கொரோனா வார்டு தயார்

*டீன் தகவல்

திருப்பூர் : தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் திருப்பூரில் இதுவரை தொற்று பாதிப்பு இல்லை எனவும், இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார் சீனாவில் 2019ம் ஆண்டு பரவிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவில் 2020ம் ஆண்டு தொடக்கத்தில் தொற்று பரவ தொடங்கிய நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும், அடுத்தடுத்து பரவிய கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்தது, பொதுமக்களின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு தொடர்ந்து பொதுமக்களுக்கு செலுத்தியதை தொடர்ந்து கொரோனா தொற்றின் தாக்கமும் குறைந்தது. நாடு முழுவதும் இயல்புநிலை திரும்பியது.

இந்நிலையில், கடந்த மாதம் பல்வேறு வெளிநாடுகளில் மீண்டும் ஒமிக்கிரான் 2.0 வகை தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியாவிலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 205 பேர் வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் திருப்பூரில் இதுவரை யாருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழ்நாடு சுகாதார துறையின் அறிவுறுத்தலின் பேரில் தயார் நிலையில் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் (பொ) பத்மினி கூறுகையில், ‘‘2021ம் ஆண்டிற்கு பிறகு கொரோனா தொற்றின் வீரியம் குறைந்தது. இயல்பாகவே தமிழகத்தின் உணவு முறைகளுக்கு ஏற்றவாறு உடலில் எதிர்ப்பு சக்திகள் அதிகம். அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டிருப்பதன் காரணமாக உடலில் எதிர்ப்பு சக்திகள் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, தற்போது பரவும் கொரோனா வகை வைரஸ் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. குறிப்பாக தமிழகத்திலும் திருப்பூரிலும் பெரும் பாதிப்பு இருக்காது. உடலில் எதிர்ப்பு சக்தி குறைவான இணை நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் கூட உயிரிழப்பு வரை கொண்டு செல்லும் வாய்ப்பு இல்லை.

உடனடியாக அதனை குணப்படுத்த முடியும். இதனால் பொதுமக்கள் யாரும் தற்போது அச்சமடைய தேவையில்லை. இருப்பினும் மாநில அரசின் சுகாதாரத்துறை உத்தரவின் பேரில் 30 படுக்கை வசதிகளுடன் கூடிய வார்டு தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சளி, காய்ச்சல் அதிக அளவு தென்பட்டால் உடனடியாக தெரியப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களின் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக சென்னை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரை யாருக்கும் மாதிரி சேகரிக்கப்படும் நிலை ஏற்படவில்லை. இதனால் பொதுமக்கள் எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை’’ என்றார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 30 படுக்கைகள் கொண்ட அறை தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனை பொதுப்பணித்துறையினர் மற்றும் மின்சார வாரியத்தினர் ஆய்வு செய்து தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்து சென்றுள்ளனர்.

தொற்று பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர். அதே நேரத்தில் பாதிப்பு இல்லை என பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல் இணை நோய் உள்ளவர்கள் சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும் வலியுறுத்தப்படுகின்றனர்.