Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அமெரிக்க டாலர்களை திருடி தமிழகம், ஆந்திராவில் ரூ.100 கோடி சொத்து குவித்த தேவஸ்தான ஊழியர்: ஜெகன் ஆட்சியில் அதிகாரிகள் பங்கு பிரித்ததாக குற்றச்சாட்டு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட அமெரிக்க டாலர்களை ஆசனவாயில் மறைத்து திருடிய தேவஸ்தான ஊழியர் தமிழகம், ஆந்திராவில் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து குவித்துள்ளார். ஜெகன்மோகன் ஆட்சியில் இதை அதிகாரிகளும் பங்கு பிரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெரிய ஜீயர் மடத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ரவிக்குமார் தேவஸ்தான ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டார்.

இதில் பல ஆண்டுகளாக காணிக்கை எண்ணும்போது வெளிநாட்டு டாலர்களை திருடி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரவிக்குமாரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், கோயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் கண்காணித்தனர். அதில் ரவிக்குமார் காணிக்கை திருடுவதை கவனித்த விஜிலென்ஸ் அதிகாரிகள், வெளியில் வந்த ரவிக்குமாரை பிடித்து தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அதில் அவர் தன்னுடைய ஆசனவாயில் பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்திய அமெரிக்க டாலர்களை திருடி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து அவர் மீது தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரவிக்குமாரை கைது செய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். அந்த விசாரணையில் சுமார் பல ஆண்டுகாலம் அவர் இதேபோல் தினமும் ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைக்கும் அமெரிக்க டாலர்களை திருடி ஆசனவாயில் மறைத்து கொண்டு சென்றதும், அந்த பணத்தில் ஆந்திரா, தமிழ்நாட்டில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து குவித்துள்ளது தெரியவந்தது. இவர் அடுக்குமாடி குடியிருப்புகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை வாங்கி குவித்துள்ளார்.

இதுபற்றி அறிந்த தேவஸ்தான நிர்வாகம், உண்டியல் காணிக்கை விவகாரம் வெளியில் தெரிந்தால் தேவஸ்தானத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டு கோயில் மீது பக்தர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பாழாகிவிடும் என்று கருதி இந்த விவகாரத்தை லோக் அதாலத்திற்கு கொண்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து சமரசம் பேசி ரவிக்குமார் காணிக்கை திருடி வாங்கி குவித்த சொத்துக்களில் ஒரு பகுதியை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக கொடுப்பதுபோல் அதிகாரிகள் எழுதி வாங்கி கொண்டனர். இந்த முடிவிற்கு அப்போது ஜெகன்மோகன்ரெட்டி ஆட்சியில் இருந்த தேவஸ்தான அறங்காவலர் குழுவும் அப்போது ஒப்புதல் அளித்தது. ஆனால் இதனை அறங்காவலர் குழுவினர் ரகசியமாக வைத்திருந்தனர்.

மேலும் ரவிக்குமாரின் சொத்துக்களில் ஒரு பகுதியை நன்கொடையாக எழுதி வாங்கிய நிலையில், மேலும் பல கோடி சொத்துகளை போலீஸ் அதிகாரிகள் மற்றும் கடந்த ஆட்சியில் இருந்த செயல் அதிகாரி தர்மா ஆகியோர் தங்களுடைய உறவினர்களின் பெயர்களில் எழுதி வாங்கிக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சந்திரபாபுநாயுடு முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில் தற்போது மீண்டும் இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரே, காணிக்கையாக செலுத்தப்பட்ட அமெரிக்க டாலர்களை திருடி ரூ.100 கோடிக்கும் அதிகமாக சொத்து குவித்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* சென்னையில் ஆசனவாய் அறுவை சிகிச்சை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து வெளிநாட்டு டாலர்களை பதுக்கி எடுத்து வருவதற்காக, வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்துபவர்கள் கொடுத்த ஆலோசனையின்படி, ரவிக்குமார் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் தன்னுடைய மலக்குடலை பெரிதுப்படுத்தி கொண்டார் என்பது அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.

* விவகாரம் வெளியே வந்தது எப்படி?

கடந்த 2 ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் ரகசியம் காக்கப்பட்ட நிலையில், ஆந்திர மாநில சட்டமேலவை உறுப்பினர் ஒருவர் மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் விவேகானந்த ரெட்டியிடம் கடந்த வாரம் புகார் அளித்தார். அதன்பேரில் அமைச்சர் விவேகானந்த ரெட்டி ஆந்திர சட்டமேலவையில் இந்த முறைகேடு, மோசடி குறித்து பேசினார். கடந்த ஆட்சியில் நடைபெற்ற இந்த மோசடி தொடர்பாக அப்போதைய அறங்காவலர் குழு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார். இதையடுத்துதான் இந்த விவகாரம் அனைவருக்கும் தெரிந்தது.