Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாத நெய்யில் கலப்படம்; நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து.! தேவஸ்தான செயல் அதிகாரி உத்தரவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தரம் குறைய நெய்யில் கலப்படம் செய்ததே காரணம். எனவே கலப்பட நெய் வழங்கிய நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்திருப்பதாக தேவஸ்தான செயல் அதிகாரி தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமியை தரிசிக்க இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசிக்கின்றனர். இக்கோயில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு உலக புகழ்பெற்றதாகும். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து லட்டு பிரசாதத்தை ரூ.10, ரூ.50, ரூ.200 ஆகிய கட்டணம் செலுத்தி பெறுகின்றனர். மிகவும் தரத்துடன் தயாரிக்கப்படும் இந்த லட்டு சுமார் 10 நாட்களானாலும் கெடாமல் இருந்தது.

ஆனால் சமீபத்தில் லட்டு பிரசாதம் தரம், சுவை குறைந்ததாகவும், விரைவில் கெட்டுபோவதாகவும் பக்தர்களிடையே குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஏற்கனவே இருந்தது போன்று சுவையாகவும் தரமாகவும் வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளாராவ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: லட்டு பிரசாதத்தின் தரம், சுவை குறைந்தது தொடர்பாக ஓய்வு பெற்ற ஊழியர்கள், நிபுணர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்களிடம் ஆலோசனை நடத்தினேன். இதில் நெய் தரம் குறைந்ததால் தரம், சுவை, நறுமணம் குறைந்ததாக தெரிவித்தனர். இதுதொடர்பான ஆய்வில் உண்மை என தெரிய வந்தது. தரமான நெய் கொள்முதல் செய்வது தொடர்பாக நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும். இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதுள்ள நெய் சப்ளை செய்யும் நிறுவனங்களை அழைத்து, தரமான நெய் வழங்க அறிவுறுத்தியுள்ளோம். சில நிறுவனங்கள் தரமான நெய்யை அனுப்புகின்றன. மற்றவை தரம் குறைந்த நெய்யை வழங்குகின்றன. அவ்வாறு அனுப்பிய நெய் சோதனையில் ஒரு நிறுவனம் கலப்பட நெய்யை கொடுத்ததும் காய்கறி கொழுப்பு சேர்த்திருப்பதும் தெரியவந்தது. எனவே தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்யும் 5 சப்ளையர்களில் ஒருவர் வழங்கிய நெய் தரமாக இல்லை என்பது சோதனையில் உறுதியானது. எனவே டெண்டர் விதிகளை மீறியதற்காக அந்த நிறுவனம் டெண்டரில் பங்கேற்காத வகையில் தடை செய்யப்பட்டுள்ளது. மற்ற நிறுவனமும் தரம் குறைந்து வழங்குவது தெரிந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.