Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம்: அலிபிரி சோதனை சாவடியில் அணிவகுத்த வாகனங்கள்

திருமலை: சனி, ஞாயிறு விடுமுறைகள் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும் அலிபிரி சோதனை சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றிருந்தன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று சனிக்கிழமை, இன்று ஞாயிறுக்கிழமை என வார விடுமுறை நாட்கள் என்பதால் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. அதன்படி நேற்று இலவச தரிசனத்தில், வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியதால் சிலாதோரணம் வரை 3 கிலோ மீட்டர் வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

இதனால் இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்களை ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் 5 மணி நேரமும், திருப்பதியில் வழங்கப்படும் இலவச சர்வ தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் அலிபிரி மலைப்பாதையில் வேண்டுதலின்படி பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது. மேலும், வாகனங்கள் செல்லும் அலிபிரி சோ தனை சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து காத்திருப்பதால் நீண்ட நேர சோதனைக்கு பிறகு திருமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

வரிசையில் உள்ள பக்தர்களுக்கும், திருமலையில் முக்கிய இடங்களான தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத கூடத்தில் தொடர்ந்து சாம்பார் சாதம், உப்புமா, காபி, பால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் 72 ஆயிரத்து 174 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து உண்டியலில் ரூ.2.88 கோடி காணிக்கையாக செலுத்தினர். பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருப்பதால் பொறுமையாக இருந்து தேவஸ்தான அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு அளித்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுகொண்டுள்ளனர்.