திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்
திருப்பதி: திருப்பதியில் பக்தர் சாப்பிட்ட தயிர் சாதத்தில் பூரான் கிடந்ததாக வெளியான செய்திக்கு திருப்பதி தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது. திருப்பதி திருமலை கோவில் வரும் பக்தர்களுக்கு தினமும் இலவச உணவு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட தயிர் சாதத்தில் பூரான் ஒன்று இறந்து கிடந்ததாக பக்தர் ஒருவர் விடியோ பதிவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இந்த விடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வைரலானது. பக்தரின் இந்த குற்றச்சாட்டு திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளது.
அதில், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தினமும் இலவச உணவு வழங்கப்படுகிறது. முழுவதுமாக வேக வைக்கப்பட்ட உணவில் உடல் பாகங்கள் சேதம் அடையாமல் முழு பூரான் சிதையாமல் இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. எனவே இந்த இட்டுக்கட்டப்பட்ட பொய்யை பக்தர்கள் நம்ப வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. லட்டு சர்ச்சை இன்னும் முடியாத நிலையில், தயிர் சாதத்தில் பூரான் கிடந்ததாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.