அமராவதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனது பேரன் தேவான்ஷ் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ரூ.44 லட்சம் தேவஸ்தான அன்னதான அறக்கட்டளைக்கு வழங்கினார். அன்னதானத்தின் போது குடும்பத்துடன் பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு; திருப்பதி மலையில் வேற்று மதத்தவர்கள் பணியில் ஈடுபடாத வகையில் நடவடிக்கைகளை எடுப்போம். பிற மதத்தை சேர்ந்த யாரேனும் தற்போது ;பணியில் இருந்தால் அவர்கள் மாற்று இடத்தில் உடனடியாக பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஏழுமலை கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் வணிக செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை. திருப்பதி மலை அடிவாரத்தில் எவ்வித கட்டுமானங்களும் இருக்கக் கூடாது என்பதற்காக அந்த அனுமதியை இப்போது ரத்து செய்து இருக்கிறோம் எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.


