Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும் அந்தியோதயா ரயிலுக்கு நாகர்கோவிலில் இருந்து இணைப்பு ரயில் இயக்கப்படுமா?: பயணிகள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டுள்ள, அந்தியோதயா ரயிலுக்கு நாகர்கோவிலில் இருந்து செல்ல வசதியாக இணைப்பு ரயில் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நாகர்கோவில் சந்திப்பு - தாம்பரம் இடையே இயங்கும் அந்தியோதயா ரயில், நாகர்கோவில் சந்திப்பில் இருந்து மாலை 3.50க்கு புறப்பட்டு வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 5.50க்கு தாம்பரத்தை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் இரவு 10.40க்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பகல் 12.35க்கு நாகர்கோவில் சந்திப்பு வந்து சேரும். இந்த ரயிலில் 20 பெட்டிகள் உள்ளன. இந்த 20 பெட்டிகளும் முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட ரயில் ஆகும். குமரி மாவட்டத்திலிருந்து குறைந்த கட்டணத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் சென்னைக்கு செல்ல மிகவும் வசதியான ரயில் ஆகும். இந்த நிலையில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தற்போது முனைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடுதலாக 2 பிளாட்பாரங்கள், ரயில் பெட்டிகளை பராமரிப்பதற்கான பிட்லைன்கள், ரயில்களை நிறுத்தி வைப்பதற்காக 5 ஸ்டேபிளிங் லைன்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கின்றன. இந்த பணிகளுக்கு வசதியாக நாகர்கோவில் - தாம்பரம் இடையே இயங்கும் முன் பதிவு பெட்டிகள் இல்லாத ரயிலான அந்தியோதயா ரயிலை (வண்டி எண் 20692, 20691) இரு மார்க்கங்களிலும் கடந்த வாரம் முதல் வரும் ஜூலை 22ம் தேதி வரை நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் திருநெல்வேலியுடன் நிறுத்த உள்ளனர்.

இந்த ரயில் 30 நாட்கள், நாகர்கோவில் வருவது ரத்து செய்யப்படுவதால், திருநெல்வேலியில் சுத்தம் செய்யப்பட்டு, மாலை 5.10 மணிக்கு, திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் புறப்பட்டு செல்லும். தாம்பரத்தில் இருந்து இந்த ரயில், திருநெல்வேலி சந்திப்புக்கு காலை 10.55க்கு வரும். இந்த ரயிலில் திருநெல்வேலியில் இறங்கினார், அடுத்த ஒரு மணி நேரத்தில் பகல் 12 மணிக்கு, திருநெல்வேலி வரும் திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயிலில் ஏறி நாகர்கோவில் சந்திப்பு வந்து விடலாம். இது குமரி மாவட்ட பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால் திருநெல்வேலியிருந்து மாலை 5.10 மணிக்கு தாம்பரத்துக்கு புறப்படும், அந்தியோதயா ரயிலை பிடிக்க, நாகர்கோவிலில் இருந்து இணைப்பு ரயில் சேவை இல்லை. எனவே இந்த பிரச்னைக்கு தீர்வு காண அந்தியோதயா ரயில் திருநெல்வேலியில் நிறுத்தப்படும் 30 நாட்களுக்கு மட்டும் கொல்லம் - கன்னியாகுமரி மெமு ரயிலை தற்காலிகமாக திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

மேலும் திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயிலை தற்காலிகமாக 30 நாட்களுக்கு மட்டும் இரணியல், ஆரல்வாய்மொழி, நாங்குநேரி ரயில் நிலையங்களில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றும் பட்சத்தில் அந்தியோதயா ரயில் பயணம் செய்யும் பயணிகள் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் வந்து இறங்கி இரண்டு மார்க்கங்களிலும் பயணம் செய்ய முடியும் என பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர்.