Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது லாரி மீது கார் மோதி காவலர், 3 பேர் பலி: நீதிபதி படுகாயம்

எட்டயபுரம்: திருச்செந்தூர் சென்றுவிட்டு திரும்பும் வழியில், எட்டயபுரம் அருகே முன்னால் சென்ற லாரி மீது, நீதிபதியின் கார் மோதி போலீஸ்காரர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர். தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக இருப்பவர் பூர்ண ஜெயஆனந்த். இவர் தனது பாதுகாப்பு போலீஸ்காரர் நவீன் குமார், தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்ற அலுவலக உதவியாளர்கள் உதயசூரியன், ஸ்ரீதர்குமார், பதிவேடு எழுத்தர் வாசு ராமநாதன், வக்கீல் தனஞ்ஜெய ராமச்சந்திரன் ஆகியோருடன் காரில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு காரில் நேற்று காலை புறப்பட்டு தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்தனர். காரை வாசு ராமநாதன் ஓட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அடுத்த மேலக்கரந்தை விலக்கு அருகே, தூத்துக்குடியில் இருந்து அரியலூருக்கு ஜிப்சம் ஏற்றிச் சென்ற லாரியின் பின்னால் கார் திடீரென பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் இருக்கை வரை லாரியின் உள்ளே சிக்கியதில் பலத்த காயமடைந்த பாதுகாப்பு போலீஸ்காரர் நவீன் குமார், வக்கீல் தனஞ்ஜெய ராமச்சந்திரன், வாசு ராமநாதன், ஸ்ரீதர்குமார் ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நீதிபதி பூர்ண ஜெயஆனந்த், தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்ற அலுவலக உதவியாளர் உதயசூரியன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து சென்ற மாசார்பட்டி போலீசார், படுகாயமடைந்த நீதிபதி பூர்ண ஜெயஆனந்த், உதயசூரியன் ஆகியோரை மீட்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்கு பதிந்து லாரி டிரைவரான கடலூர் மாவட்டம் பொம்மரக்குடியை சேர்ந்த விஜயராஜிடம் (27) விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.