Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா சுவாமி சண்முகர் பச்சை சாத்தி வீதியுலா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழாவில் நேற்று காலை சுவாமி சண்முகப்பெருமான் வெள்ளை சாத்தி வெள்ளி சப்பரத்திலும், பகலில் பச்சை சாத்தி பச்சை கடைசல் சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், நாளை (2ம் தேதி) நடைபெறுகிறது.கடந்த ஆக.24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் நாள்தோறும் காலை, மாலையில் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் 7ம் நாளன்று வள்ளி, தெய்வானையுடன் சுவாமி சண்முகர், சிவப்பு சாத்தி தங்க சப்பரத்தில் முன்பக்கம் சிவன் அம்சமாகவும், பின்பக்கம் நடராஜர் அம்சமாகவும் எழுந்தருளி, வீதியுலா வந்தனர். நேற்று காலை 7 மணிக்கு பந்தல் மண்டபம், தையல் நாயகி வகையறா மண்டகப்படி மண்டபத்தில் இருந்து பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி பிரம்மா அம்சத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சேர்ந்தார். தொடர்ந்து பந்தல் மண்டபம், வைகுண்டம் சுந்தர ராமசுப்பிரமணிய பிள்ளை வகையறா மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்று, மதியம் 12 மணிக்கு பச்சை சாத்தி, பச்சைக் கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து திருக்கோயில் சேர்ந்தார்.

இன்று (1ம் தேதி) காலை சுவாமி குமரவிடங்கப்பெருமானும், சுவாமி அலைவாயுகந்தப்பெருமானும் தனித்தனி வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி நெல்லை சாலையில் உள்ள வேட்டைவெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தி வீதியுலா வந்து மேலக்கோயில் சேர்ந்தனர். தொடர்ந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான், வள்ளியம்மனும் பகலில் தனித்தனி பல்லக்கிலும், இரவு சுவாமி தங்கக் கயிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக்கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், நாளை (2ம் தேதி) நடைபெறுகிறது. காலை 6.30 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது.

பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர்கள் திருவீதி வலம் வந்து நிலை சேர்கிறது. மறுநாள் 11ம் திருவிழாவை முன்னிட்டு, சுவாமி, அம்மன் மாலையில் யாதவர் மண்டகப்படியில் அபிஷேகம், அலங்காரமாகி புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி இரவு தெப்பக்குளம் மண்டபத்திற்கு வந்து சேருகின்றனர். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சேருகின்றனர். செப். 4ம்தேதி மாலை சுவாமி மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் வீதியுலா வந்து, வடக்கு ரதவீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் முதலியார் மண்டபத்தை அடைகிறார். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி, அம்மன் தனித்தனி மலர்க்கேடயச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து திருக்கோயில் சேர்ந்து திருவிழா நிறைவு பெறுகிறது.