திருச்செந்தூரில் அரோகரா கோஷம் முழங்க சூரனை சம்ஹாரம் செய்தார் ஜெயந்திநாதர்: கடற்கரையில் லட்சக்கணக்கானோர் தரிசனம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகரமாக நேற்று மாலை கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்களின் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ கோஷம் விண்ணதிர சூரனை ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஸ்தல புராணத்தை உணர்த்தும் கந்தசஷ்டி திருவிழா, கடந்த 22ம் தேதி தொடங்கியது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நேற்று நடைபெற்றது.
இதையொட்டி கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, அதிகாலை 4 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெற்றது. சஷ்டியை முன்னிட்டு மூலவரான முருகப்பெருமான் தலையில் வைர கிரீடத்துடனும், தங்க அங்கியும் அணிந்து அழகே உருவாய் காட்சியளித்தார். சஷ்டி விரதமிருக்கும் பக்தர்கள் கடலில் புனித நீராடியும், அங்கப்பிரதட்சணம் மற்றும் காவடி எடுத்தும் தரிசனம் செய்தனர்.
காலை 6 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு ஹோமங்கள் நடந்து, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவரான சுப்பிரமணியருக்கு சஷ்டி சிறப்பு தீபாராதனை, உச்சிக்கால தீபாராதனை நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்த ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனையாகி அம்மன்களுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாசம் வந்தார். பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்திற்கு வந்து, அங்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சர்வ அலங்காரமாகி கோயிலில் வேல்பூஜை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சூரசம்ஹாரத்திற்காக சுவாமி ஜெயந்திநாதர் மாலை 4.30 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் புறப்பட்டார். முன்னதாக சூரபத்மன் தனது பரிவாரங்களுடன் சிவன் கோயிலில் இருந்து புறப்பட்டு உள், வெளி மாடவீதிகள் மற்றும் ரதவீதிகள், சன்னதித்தெரு வழியாக கோயில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். முதலில் கடற்கரையில் மாலை 4.57 மணிக்கு கஜமுக சூரனை சம்ஹாரம் செய்தார். இரண்டாவதாக மாலை 5.17 மணிக்கு ஆணவம் அடங்காத சூரபத்மன் சிங்கமுகமெடுத்து அமைதியின் திருஉருவமான முருகப்பெருமானை 3 முறை சுற்றி வந்து போர் புரிந்தான்.
முருகன் தனது வேலால் சிங்கமுக சூரனை சம்ஹாரம் செய்தார். மூன்றாவதாக மாலை 5.33 மணிக்கு சூரபத்மன் தனது சுயரூபத்துடன் போர் புரிய வந்தார். அவரை முருகப்பெருமான் வதம் செய்தார். அதன்பிறகும் ஆணவம் அடங்காத சூரபத்மன் கடைசியாக மாலை 5.45 மணிக்கு மாமரமாக உருவெடுத்து மீண்டும் போருக்கு வந்தான். முருகப்பெருமான் மாமரமாக வந்த சூரபத்மனின் ஆணவத்தை ஆட்கொண்டு அவனை சேவலாகவும், மயிலாகவும் உருமாறச் செய்தார். அந்த சேவலையே தனது கொடியாகவும், மயிலையே தனது வாகனமாகவும் மாற்றினார்.
ஒவ்வொரு முறை முருகப்பெருமான் சூரபத்மனிடம் போர் புரியும்போது வானில் கருடன் வட்டமிட்டதைக் கண்ட பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று விண்ணதிர கோஷம் எழுப்பினர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (26ம் தேதி) நள்ளிரவு முதலே திருச்செந்தூர் கோயிலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிளிலிருந்தும் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்தனர். அதிகாலை 1 மணிக்கு நடை திறந்தது முதல் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
பக்தர்கள் வசதிக்காக நெல்லை, தூத்துக்குடி, மதுரை மற்றும் பல்வேறு வழித்தடங்களில் 400க்கும் மேற்பட்ட சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, சண்முகையா எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தர், கலெக்டர் இளம்பகவத், தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி, பெருங்குளம் செங்கோல் ஆதீனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* இன்று திருக்கல்யாணம்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்பட்டு, தெற்கு ரத வீதி வழியாக தெப்பக்குளத்தெருவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தை சேர்கிறார். மாலையில் சுவாமி தனிச்சப்பரத்தில் புறப்பட்டு வந்து, தெற்கு ரத வீதி- மேல ரத வீதி சந்திப்பில் வைத்து சுவாமி- அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. நள்ளிரவு கோயிலில் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.
* பழநியில் கொட்டும் மழையில் சூரர்களை சின்னக்குமாரர் வதம் செய்தார்
திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு மேல், கிரிவீதியில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. வீரபாகு மற்றும் நவவீரர்கள் சமரசம் பேசும் நிகழ்ச்சி நடந்தது. இதனைத்தொடர்ந்து தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க வடக்கு கிரிவீதியில் தாரகாசூரனையும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபனையும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும் கொட்டும் மழையிலும் வதம் செய்தார். இதனைத்தொடர்ந்து ஆரிய மண்டபத்தில் வெற்றி விழா நடந்தது. இன்று காலை மலைக்கோயிலில், சண்முகர் வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம், இரவு பெரியநாயகி அம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும். முருகனின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று மாலை சூரசம்ஹாரம் நடந்தது.
