Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டிவிழா; பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செய்துள்ளோம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

பெரம்பூர்: சென்னை கொளத்தூரில் உள்ள அகரம் ஜெகந்நாதன் சாலையில் முதல்வர் படைப்பகத்தின் முன்னேற்பாடு பணிகளையும் கொளத்தூர் தொகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் பெரியார் நகர் பேருந்து நிலையத்திலும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். இதன்பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; மாதவரம் பேருந்து நிலையத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தற்போது விழா காலங்களிலும் கூட அந்த பேருந்து நிலையம் அதிகளவு பயணிகள் பயன்படுத்துகின்ற அளவிற்கு ஒரு நல்ல தரத்தோடு இன்று செயல்பட்டு வருகிறது. ஆம்னி பேருந்து நிலையத்தை கட்டவேண்டும் என்ற திட்டமிட்டு 42 கோடி செலவில் ஆம்னி பேருந்து நிலையம் முடிச்சூரில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. கூடிய விரைவில் தமிழக முதல்வரால் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

பெரியார் நகர், திருவிக. நகர், முல்லை நகர், அம்பத்தூர், ஆர்.கே.நகர் போன்ற 7 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் வடிவமைக்கின்ற பணி நடைபெற்று வருகிறது. முதலமைச்சரின் தொகுதியில் தற்போது கட்டப்பட்டுவரும் பெரியார் நகர் பேருந்து நிலையம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். வடசென்னையில் கட்டப்பட்டு வரும் 7 புதிய பேருந்து நிலையங்களும் அடுத்தாண்டு டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு வரும். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 79 முருகன் கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. 7 முருகன் கோவிலில் பெருந்திட்ட வரைவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழ் கடவுள் முருகனுக்கு எந்த ஆட்சியும் செய்யாத பெருமையை இந்த ஆட்சி செய்துள்ளது. திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவுக்கு 7ம் தேதி 6 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருக்கல்யாணத்திற்கு 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக கந்த சஷ்டி விழாவுக்கு 14 லட்சம் பக்தர்கள் வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பக்தர்களுக்கு தேவையான கழிப்பிட வசதி, தீயணைப்பு வாகனம், குடிநீர் வசதி என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. கந்த சஷ்டி திருநாளில் 12 கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இருக்கக்கூடிய மாணவ மாணவிகளும் இசைக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் 738 பேரை வைத்து கந்தசஷ்டி பாராயணமும் படிக்கப்பட உள்ளது. இன்று மாலை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி பாராயணத்தை நான் தொடங்கி வைக்க இருக்கிறேன்.இவ்வாறு கூறினார்.

இதைத்தொடர்ந்து மாதவரம் பேருந்து நிலையம், அண்ணாநகர் கிழக்கு முழு நேர நூலகத்தின் பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, அதுல்ய மிஸ்ரா, பிரவீன் குமார், மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி, நாகராஜன், மண்டல குழு தலைவர்கள் சரிதா, நந்தகோபால், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மகேஷ்குமார், சந்துரு இருந்தனர்.