Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்செந்தூரில் திருநங்கையருக்கு இல்ல பால் ஊற்றும் விழா

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் முதன் முறையாக இளம் திருநங்கையருக்கு இல்ல பால் ஊற்றும் விழா நடந்தது. இறைவன் படைப்பின் சிறப்பம்சமாக கருதப்படுவோர் மூன்றாம் பாலினமாக கருதப்படும் திருநங்கைகள். இவர்கள் தற்போது கல்வி, அரசு பணி உள்ளிட்ட அனைத்து துறையிலும் முத்திரை பதித்து வருகின்றனர். ஆணோ அல்லது பெண்ணோ அவர்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இவர்கள் மூன்றாம் பாலினம் என்று அழைக்கப்படுகின்றனர்.

ஆணாக இருந்து முழுமையாக பெண்ணாக மாறிட அறுவை சிகிச்சை செய்து கொண்ட திருநங்கைகள் 40 நாட்கள் விரதம் இருப்பர். அதன் பின்னர் அவர்களுக்கு நடைபெறும் சடங்குதான் இல்ல பால் ஊற்றும் விழா. இச்சடங்கு திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த கற்பகம், ஷிவானி, சிலுக்கு ஆகிய 3 பேருக்கு திருச்செந்தூர் ஐஎம்ஏ மஹாலில் செந்தூர் திருநங்கையர் நலச் சங்க தலைவர் சியாமளா தலைமையில் நடந்தது.

விழாவின் தொடக்கமாக போத்திராஜ் மாதா என்று அழைக்கப்படும் சந்தோஷி மாதாவிற்கு பூஜை செய்யப்பட்டது. பின்னர் 3 திருநங்கைகளுக்கும் சடங்கு முறைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து அவர்கள் மணப்பெண் போல் அலங்கரிக்கப்பட்டு மூத்த திருநங்கையர்களிடம் ஆசி பெற்றனர். பின்னர் மொய் வழங்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து திருநங்கைகளின் ஆடல் - பாடல் நிகழ்ச்சி மற்றும் உணவு விருந்து நடந்தது.

விழாவில் தமிழகம் மட்டுமின்றி மும்பை உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் 300க்கும் மேற்பட்ட மூத்த திருநங்கையர் வருகை தந்து வாழ்த்தினர். திருச்செந்தூரில் முதன் முறையாக நடைபெற்ற இல்ல பால் ஊற்றும் விழாவை திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த திருநங்கையர்கள் மண்டபத்தின் முன் பேனர் வைத்து ஆரவாரமாகவும், வெகு விமரிசையாகவும் கொண்டாடினர்.