Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆக.24ம் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றம்: செப்.2ம் தேதி தேரோட்டம்

திருச்செந்தூர்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா, வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது குறித்து கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 24ம் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு திருவிழா கொடியேற்றப்படுகிறது. மாலை வேளையில் அப்பர் சுவாமிகள் கோயிலில் இருந்து தங்க சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவார பணி செய்யும் நிகழ்ச்சி, இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியாக 28ம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஆக.29ம் தேதி காலையில் கோ ரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதி உலா வருதல், 30ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 8.45 மணிக்கு சுவாமி சண்முகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் தரிசனத்துடன், பிள்ளையன்கட்டளை மண்டபத்தை சப்பரம் சேருகிறது.

அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஆக.31ம் தேதி காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி சுவாமி எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சேர்கிறார். தொடர்ந்து 8ம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்று, காலை 10.30 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் வந்து சேர்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், செப்.2ம் தேதி காலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.