Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டிய சித்தர் ஜீவசமாதி சுற்றுப்புற சுவர் விரிசல்

*சீரமைக்க கோரி முதியவர் யோகா போராட்டம்

ஸ்ரீவைகுண்டம் : திருச்செந்தூர் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டிக் கொடுத்த சித்தர் ஜீவசமாதி சுற்றுப்புற சுவரில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்க வலியுறுத்தி ஆழ்வார்தோப்பு அமைவிடத்தில் யோகாசனம் செய்து முதியவர் போராட்டம் நடத்தினார்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ராஜகோபுரம் அமைத்து திருப்பணிகள் நடத்திய ஞானதேசிக மூர்த்தி சுவாமிகள், குடமுழுக்கு விழா நேரத்தில் ராஜகோபுரம் வழியாக கோயிலுக்குள் நுழைந்து மறைந்தார் என்பது வரலாறு.

இதற்கான குறிப்புகள், திருச்செந்தூர் கோயிலிலும் ஞானதேசிக மூர்த்தி சித்தரின் ஜீவசமாதி அமைவிடத்திலும் அமைக்கப்பட்டு உள்ளது. இவரது ஜீவசமாதி, ஸ்ரீவைகுண்டம் அருகே மேலஆழ்வார்தோப்பு கிராமத்தில் அமைந்துள்ளது. தற்போது இந்த ஜீவசமாதியின் சுற்றுப்புறச் சுவர் விரிசல் விழுந்து உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் பக்தர்கள், ஞானதேசிக மூர்த்தி சுவாமிகளை தரிசனம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோயிலை கட்டியதாக கூறப்படும் 5 சித்தர்களில் 4 பேரின் ஜீவசமாதி, திருச்செந்தூர் கோயில் கடற்கரை அருகே அமைக்கப்பட்டு உள்ளது. ராஜகோபுரம் அமைத்த ஞானதேசிக மூர்த்தி சுவாமிகளின் ஜீவசமாதி மட்டும் மேலஆழ்வார்தோப்பு கிராமத்தில் உள்ளது. திருச்செந்தூரில் தரிசனம் செய்து விட்டு கோயிலை கட்டி முடித்தவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக அங்கு அமைக்கப்பட்டுள்ள ஜீவசமாதிக்கு நேரில் சென்று தரிசனம் செய்வது வழக்கம்.

இதேபோல் ஆழ்வார்தோப்பு தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் காந்தீஸ்வரன் கோயிலுக்கு பின்பகுதியில் அமைந்துள்ள ஞானதேசிக மூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதிக்கும் கடந்த காலங்களில் பக்தர்கள் அதிகளவில் வந்து சென்று உள்ளனர். தற்போது ஜீவசமாதின் சுற்றுப்புற சுவர்கள் விரிசல் ஏற்பட்டு உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் ஜீவசமாதியை சுற்றி வந்து தரிசனம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

திருவாவடுதுறை ஆதீனத்தால் பராமரிக்கப்படும் ஞானதேசிக மூர்த்தி ஜீவசமாதி சுற்றுப்புற சுவரை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி ஆழ்வார்திருநகரியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற 77 வயதான யோகா மாஸ்டர், ஜீவசமாதி முன்பு பல்வேறு யோகாசனங்களை செய்து போராட்டம் நடத்தினார்.இதுகுறித்து யோகா மாஸ்டர் சண்முகசுந்தரம் கூறுகையில், திருச்செந்தூர் கோயிலை கட்டிய 5 சித்தர்களையும் வணங்கினால் எல்லா துன்பங்களும் போகும். திருச்செந்தூர் கோயிலில் உள்ள 4 சித்தர்களை வணங்கிவிட்டு ஆழ்வார்தோப்பில் உள்ள ஞானதேசிக மூர்த்தி சித்தரையும் வணங்க இங்கு வருவார்கள்.

ஆனால் தற்போது ஞானதேசிக மூர்த்தி சித்தரை வணங்க முடியாத நிலையில் இடிந்து விழும் அளவிற்கு சுற்றுப்புற சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை பராமரித்து கட்டினால்தான் பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்ய வசதியாக இருக்கும். ஜீவசமாதியின் தற்போதைய நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சித்தர்கள் மேற்கொண்ட ஆசனங்களை செய்தேன், என்றார்.

பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும்

திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வரை தொழில் வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஆழ்வார்திருநகரியில் இருந்து ஆழ்வார்தோப்பு வழியாக கருங்குளம் வரை புதிய வழித்தடம் அமைக்கப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்த பின்னர் நெல்லை- திருச்செந்தூர் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த வழியாகத்தான் செல்லும்.

மேல ஆழ்வார்தோப்பு கிராமத்தில் இச்சாலை ஓரத்தில் ஞானதேசிக மூர்த்தி சித்தர் ஜீவசமாதி மட்டுமின்றி இப்பகுதியில் மேலும் 4 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன. இது தவிர 13 சித்தர்கள் இப்பகுதியில் தற்போதும் உள்ளதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. எனவே எளிதாக பக்தர்கள் இப்பகுதிக்கு வந்து செல்லும் வகையில் இங்கு பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

சித்திரை 1ல் சிறப்பு வழிபாடு

ஆழ்வார்தோப்பு கிராமத்தில் அமைந்துள்ள ஞானதேசிக மூர்த்தி ஜீவ சமாதி அமைவிடத்தில் தினமும் காலை 6:30 மணி முதல் 7.30 மணி வரை பூஜைகள் நடைபெறுகிறது. சித்திரை மாதம் 1ம் தேதி ஞானதேசிக மூர்த்தி சித்தரின் வம்சாவளியினர் சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். மேலும் ஞானதேசிக மூர்த்தி சித்தர் மறைந்த மார்கழி மாதம் கார்த்திகை நட்சத்திரம் வரும் தினத்தன்று அவரது வம்சாவளியினர் மற்றும் திருவாடுதுறை ஆதீனம் சார்பில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.