சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு ஒரு முத்திரை விழா என மக்கள் பாராட்டி உள்ளனர். திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கு விழா நேற்று முன்தினம் காலை 6.50 மணியளவில் கோலாகலமாக நடந்தது. அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தமிழ் மறைகள் முழங்கிட தருமபுர ஆதினம், மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள், சிருங்கேரி சாரதா பீடாதிபதி சாமிகள் முதலானோர் சூழ வெகு சிறப்பாக நடந்தது.
லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் மட்டுமல்ல, தொலைக்காட்சி வழியாக குட முழுக்கு விழாவைப் பார்த்து மகிழ்ச்சியில் திளைத்தனர். திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவிற்காக திராவிட மாடல் அரசின் அருமையான முன்னேற்பாடுகளை குறிப்பாக அனைத்து மாநிலங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்து வசதிகள், தங்குமிட வசதிகள், திரும்பிய இடமெல்லாம் அன்னதானங்கள் என அனைத்தையும் கண்டு மகிழ்ந்த பொதுமக்கள் மலைத்துப்போய் தமிழ்நாடு அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் பாராட்டினர்.
திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த ஏறத்தாழ 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று பக்திப் பரவசத்துடன் தங்கள்தங்கள் ஊர்களுக்கும் வீடுகளுக்கும் சென்றுள்ளனர். கும்பமேளாவை காண சென்ற எத்தனை பேர் அங்கு மடிந்தனர். எவ்வளவு பெரிய தீ விபத்துகள் அங்கே நிகழ்ந்தன. கும்பமேளாவிற்கு வந்த மக்கள் டெல்லி உள்பட பல ரயில் நிலையங்களில் எவ்வளவு பிரச்னைகளை சந்தித்தனர். எத்தனை கொடுமைகள் நிகழ்ந்தன.
அவற்றை எல்லாம் எண்ணிப் பார்க்கும்போது, எத்தனை லட்சம் பேர் வந்தால் என்ன, அவர்கள் அத்துனை பேரின் நலன்களையும் பாதுகாப்பையும் உறுதி செய்து, நன்கு திட்டமிட்டு, திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை மக்கள் பாராட்டும் வகையில் நடத்தி வெற்றி கண்டுள்ள திராவிட மாடல் அரசின் நாயகரும், அவரது அமைச்சர்கள், அதிகாரிகள் முதலானோரும் என்றும் எல்லோருக்கும் முன்னோடிகள்.