Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டைடல் பார்க் பகுதியில் ரூ.108 கோடியில் கட்டப்படும் ‘U’ வடிவ மேம்பாலம் விரைவில் திறக்கப்படும்: டிஎன்ஆர்டிசி அதிகாரி தகவல்

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, பிரதான சாலையாக இருக்கும் ராஜிவ் காந்தி சாலையில் எப்போதும் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. ஐடி நிறுவனங்கள் உட்பட பல்வேறு தனியார் நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை இந்த சாலையில் அதிகளவில் அமைந்துள்ளதால், தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் வந்து செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக ராஜிவ் காந்தி சாலை மற்றும் இசிஆர் சாலையை இணைக்கும் டைடல் பார்க் சிக்னல் சந்திப்பை கடக்க குறைந்தபட்சம் சாதாரண நேரங்களில் 10 நிமிடம் வரை ஆகிறது. அதே நேரத்தில் பீக் அவர்சில் 15 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் வரை ஆகிறது. இதனால், வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனையடுத்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் இந்த பகுதியில் ஆய்வு நடத்தி, டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்ட பரிந்துரை செய்தனர். அதன்படி ராஜிவ் காந்தி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே ‘U’ வடிவில் ரூ.108 கோடியில் மேம்பாலம் அமைக்க கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே ‘U’ வடிவ மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்தாண்டு நவம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டப்பட்டது. அதனை தொடர்ந்து டைடல் பார்க் அருகில் கட்டப்பட்டு வரும் 2வது ‘U’ வடிவ மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘டைடல் பார்க் சந்திப்பில், ராஜிவ் காந்தி சாலையில் கட்டப்பட்டுள்ள ‘U’ வடிவ மேம்பாலம், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும்.

மேம்பாலத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. சர்வீஸ் ரோடு மற்றும் ஒருபுறம் சாய்வுதளம் அமைக்கப்பட உள்ளது. சிஎஸ்ஐஆர் சாலையில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டால் திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் வாகன ஓட்டிகள் யூ-டர்ன் எடுக்க பயன்படுத்த வேண்டும். வாகன ஓட்டிகள் இடதுபுறம் திரும்பி மேம்பாலத்தில் ஏறி, உயரமான மட்டத்தில் யு-டர்ன் எடுத்து, டைடல் பூங்காவிற்குச் செல்லும் சாலையில் இறங்கி போக முடியும். சாய்தளம் அமைய உள்ள பகுதியில் மின்சார வழித்தடங்கள் உள்ளதால் அதனை மாற்றியமைக்கப்பட்டு சாய்வு தளம் அமைக்கப்படுவதில சிக்கல்கள் ஏற்படுகிறது. அதேபோல் மழைநீர் வடிகால் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் 2வது யூடர்ன் மேம்பாலம் கட்டி முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. ஆனால் இந்த மேம்பாலம் முடிக்கப்படும் போது டைடல் பார்க் பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசல் முழுமையாக குறையும்,’’ என்றார்.