சீட்டு பணம் குறித்து விபரம் கேட்டதால் பெண்ணுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: ஒருவர் கைது, 3 பேருக்கு வலை
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே சீட்டு பணம் குறித்து விபரம் கேட்டதால் பெண்ணை உருட்டு கட்டையால் தாக்கியவரை, போலீசார் கைது செய்து, மேலும் தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர். ஆர்.கே.பேட்டை தாலுகா, சிஜிஎன் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி என்பவரின் மகள் சபீனா (24). வேலன் கண்டிகை பகுதியில், தனியார் கம்பெனியில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவர், அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் என்பவரிடம் ரூ2 லட்சம் சீட்டு போட்டு, ரூ1 லட்சத்து 8 ஆயிரம் எடுத்துள்ளார். இதற்கு, மாதந்தோறும் 5 ஆயிரம் சீட்டு கட்டி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 22ம் தேதி சீட்டு பணம் இதுவரை எவ்வளவு செலுத்தியுள்ளோம், மீதம் எவ்வளவு பாக்கி உள்ளது என்பதை பார்ப்பதற்காக சபீனா, வெங்கடேசன் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது, வீட்டில் வெங்கடேசன் இல்லாததால் சபீனா திரும்பி வந்துள்ளார். சபீனா வீட்டிற்கு வந்துபோனதை தெரிந்துகொண்ட வெங்கடேசன், தனது உறவினர்களான கோவிந்தராஜ், சூசைராஜ், சாரதா ஆகியோருடன் சபீனா வீட்டிற்குச் சென்று அவரை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த சபீனாவை, அவரது தந்தை சுப்பிரமணி மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, சபீனா அளித்த புகாரின்பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிந்தராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர்.


