மிர்சாபூர்: உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் ரயில் நிலையத்தில் நேற்று கங்கை நதி தண்ணீர் எடுக்க பயணம் மேற்கொண்ட கன்வாரியாக்கள்( சிவ பக்தர்கள்) பலர் வந்து இருந்தனர். அப்போது டிக்கெட் தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டு, சீருடையில் இருந்த ஒரு சிஆர்பிஎப் வீரரை, கன்வாரியாக்களால் சரமாரியாக தாக்கி தரையில் தள்ளி, உதைத்த சம்பவம் நேற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிர்சாபூர் நிலையத்தில் பிரம்மபுத்ரா ரயிலில் ஏறுவதற்காகக் காத்திருந்தபோது இந்த மோதல் நடந்துள்ளது.
இதுதொடர்பான வீடியோ நேற்று வைரலானது. அந்த வீடியோவில், காவி உடையில் குறைந்தது எட்டு பேர் சீருடையில் இருந்த சிஆர்பிஎப் வீரரைச் சுற்றி வளைத்து, அவரை இழுத்துச் செல்வதையும், அவர்களில் ஒருவர் அவரைத் தாக்குவதையும் காட்டுகிறது. அவர் பதிலடி கொடுக்க முயற்சிக்கும்போது, பல கன்வாரியாக்களால் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டு, தரையில் விழுவதும், அவரை கன்வாரியாக்கள் சரமாரியாக மிதிப்பதும் தெரிகிறது. மேலும் ஒருவர் சிஆர்பிஎப் வீரரை எழுந்திருக்க உதவுகிறார்.
அவர் கன்வாரியாக்களை நோக்கி சென்று அவர்களில் ஒருவரை கன்னத்தில் அறைவதையும், அதை தொடர்ந்து அனைவரும் மீண்டும் அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி உதைக்கிறார்கள். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே காவல் படை ஆய்வாளர் சாமன் சிங் தோமர் தெரிவித்தார்.