Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒவ்வொரு வியாழன் மாலையிலும் சென்னை விமான நிலையத்தில் வாராந்திர உணவு திருவிழா: பாரம்பரிய உணவுகளை ருசிக்கலாம்

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வாராந்திர உணவுத் திருவிழாவை, சென்னை சர்வதேச விமான நிலையம் மற்றும் தனியார் உணவு நிறுவனம் (டிராவல்ஸ் புட் சர்வீசஸ்) இணைந்து நடத்துகின்றன. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 3 மணி அளவில், டிஎப்எஸ் லவுஞ்சில், பிரபல சமையல் கலைஞர்கள் கலந்துகொண்டு, பயணிகளுக்கு நேரடியாக, சுவையான உணவுப் பொருட்களை தயார் செய்து கொடுக்கின்றனர். உணவு திருவிழாவில், பாரம்பரியமான தென்னிந்திய உணவுகளின் சிறப்புகள், உணவுகளை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் நன்மைகள், அதிகமான எண்ணெய், காரம் இல்லாமல், சுவை மிக்க உணவுகளை தயாரிப்பது குறித்தும் சமையல் கலைஞர்கள் பயணிகளுக்கு விளக்கம் அளிப்பார்கள். சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் அனுபவத்தை, புதிய நிலைக்கு மேம்படுத்தும் திட்டத்துடன் இந்த விமான நிலைய உணவுத் திருவிழா தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது நவீன காலங்களில், பல்வேறு புதிய உணவுகள் வருகையால் பாரம்பரியம் சிறப்புமிக்க, தென்னிந்திய சுவையான உணவுகள் தயாரிப்பது, உட்கொள்வது படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த குறையை போக்கும் விதத்திலும், தென்னிந்திய உணவு வகைகளின் சிறப்புகளையும், பல்வேறு உணவுகளில் உள்ள மருத்துவ குணங்களையும், சென்னை விமான நிலையத்திற்கு வரும் வெளி மாநில, வடமாநில, வெளிநாட்டு பயணிகளுக்கும் எடுத்துக்காட்டும் விதத்திலும், இந்த உணவு திருவிழா நடத்தப்படுவதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். உணவு திருவிழாவின் முதல் தொடக்க நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை மாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் டிஎப்எஸ் லவுஞ்சில் நடந்தது. சென்னை விமான நிலைய இயக்குனர் சி.வி. தீபக், இந்த உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்தார். பிரபல சமையல் கலைஞர் மற்றும் விமான பயணிகள் விமான நிலைய ஊழியர்கள் கலந்துகொண்டனர்.