Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துடியலூர் அருகே ருசிகர சம்பவம் நாய்கள் துரத்தியதால் தென்னை மரத்தில் ஏறி பரிதவித்த குரங்கு

* காப்பாற்றிய விவசாயிக்கு மக்கள் பாராட்டு

பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே நாய்கள் துரத்தியதால் தென்னை மரத்தில் ஏறி பரிதவித்த குரங்கை காப்பாற்றிய விவசாயிக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர். கோவை துடியலூர் அடுத்துள்ள கணுவாய் பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் யானை, குரங்கு, மயில், காட்டுப்பன்றி, போன்ற வனவிலங்குகள் அதிகமாக உள்ளது.

இதில் குரங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து உணவுகளை தேடிச்செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் தடாகம் அருகே பாப்பநாயக்கன்பாளையம் குடியிருப்பு பகுதிக்குள் குரங்கு ஒன்று புகுந்தது. அது அங்குமிங்கும் ஓடியது.

இதைப்பார்த்த பொதுமக்கள் அதை விரட்டியபோது அருகில் உள்ள விவசாயி கிரிதரன் என்பவர் தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கு தோட்டத்தில் இருந்த நாய்களும் சேர்ந்து குரங்கை விரட்டவே அது வேகமாக ஓடி, சரசரவென தென்னை மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டது. ஆனால் நாய்கள் விடாமல் சத்தம் போட்டுக் கொண்டே இருந்தது.

இதைக்கேட்டு விவசாயி கிரிதரன் தோட்டத்துக்கு வந்து பார்த்த போது தென்னை மரத்தை சுற்றி நின்று கொண்டிருந்த நாய்கள் சத்தம் போடுவதும் குரங்கு ஒன்று பயத்தில் பரிதவித்தபடி மரத்தின் மேல் உட்கார்ந்திருந்ததையும் பார்த்தார். உடனே அவரது தோட்டத்து நாய்களை கட்டிப் போட்டார்.

அதன் பின்னர் குரங்கு என்ன செய்கிறது என்று சிறிது நேரம் அங்கேயே நின்று பார்த்துக்கொண்டிருந்தார். அவர் நின்று இருப்பதை பார்த்த குரங்கு மேலே இருந்து பாதி தூரம் வந்து விட்டு திரும்பி போய் மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டது.

இதை உணர்ந்த கிரிதரன் சற்று தூரம் தள்ளி சென்று நின்றார். அந்த சமயத்தில் மெதுவாக இறங்கிய குரங்கு அங்கிருந்து ஓட்டம் பிடித்து கணுவாய் வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது. இந்த ருசிகர சம்பவம் அப்பகுதியினரிடம் வேகமாக பரவியது. இந்நிலையில் நாய்களிடமிருந்து குரங்கை காப்பாற்றிய விவசாயி கிரிதரனுக்கு அப்பகுதி பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.