திருச்சூரில் கடந்த 2021ல் சிக்கியது பாஜவுக்கு கொண்டு வரப்பட்ட ரூ.41.50 கோடி ஹவாலா பணம்: மறுவிசாரணை நடத்த கேரள அரசு முடிவு
திருவனந்தபுரம்: கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கொடகரை பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு காரை வழிமறித்து ஒரு கும்பல் பணத்தை கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வௌியாகின. காரிலிருந்து உண்மையில் கொள்ளையடிக்கப்பட்டது ரூ.7.90 கோடி என்றும், அது பாஜவுக்கு தேர்தல் செலவுக்காக கொண்டு வரப்பட்ட ஹவாலா பணம் என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் தேர்தல் செலவுக்காக கர்நாடக மாநிலத்திலிருந்து மொத்தம் ரூ.41.48 கோடி ஹவாலா பணம் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இந்த பணத்திலிருந்து ரூ.7.90 கோடியை காரில் கொண்டு செல்லும்போதுதான் இதுகுறித்து அறிந்த சில பாஜவினர் திட்டமிட்டு அந்தக் காரை மறித்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பாஜவை சேர்ந்த 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் திருச்சூர் மாவட்ட பாஜ அலுவலக செயலாளராக இருந்த சதீசன் என்பவர் பாஜ அலுவலகத்துக்கு 6 சாக்குகளில் பணம் கொண்டு வரப்பட்டது தனக்கு தெரியும் என்று நேற்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சாக்குகளில் தேர்தலுக்குத் தேவையான பொருள்கள் இருப்பதாக முதலில் தன்னிடம் கூறியதாகவும், ஆனால் அதில் இருப்பது பணம் என்று பின்னர்தான் தனக்கு தெரிய வந்தது என்றும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து இந்த ஹவாலா பண விவகாரம் தொடர்பாக மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிப்புடன் முதல்வர் பினராயி விஜயன் நேற்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் தேர்தல் செலவுக்காக பாஜவுக்கு கொண்டு வரப்பட்ட ரூ.41.48 கோடி ஹவாலா பணம் தொடர்பாக மறுவிசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தின் அனுமதி கோரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.