Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளின் சொத்து விவரம் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

* ஒரு தொழிலதிபர் விரும்பியதால் துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கிறார்கள்

* சிபிஐயின் கையாலாகாத்தனம் வெளிப்பட்டுள்ளது

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை குறித்து கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது முன்கூட்டியே திட்டமிட்டதாக தெரிகிறது. ஒரு தொழிலதிபர் விரும்பியதால் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார்கள். அதற்கு போலீசார் உடந்தையாக செயல்பட்டு இருக்கிறார்கள் என்றும் நீதிபதிகள் கடுமையான கேள்விகளை எழுப்பினர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, மனுதாரர் ஹென்றி திபேன் ஆஜராகி, துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எங்கெல்லாம் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது என்று போலீசார் தெரிவிக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்திலிருந்து 7 கிமீ தூரத்தில் உள்ள வீட்டில் இருந்த ஒருவர் துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளார். மிக தூரம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய துப்பாக்கிகளை போலீசார் பயன்படுத்தியுள்ளனர். அந்த சம்பவம் நடந்தபோது இருந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஒருவரும் சிபிஐயின் இறுதி அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்று வாதிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், சம்பவம் நடந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது. இதுவரை சிபிஐயால் விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய முடியவில்லை. இது சிபிஐயின் கையாலாகாத தனத்தையே காட்டுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிபிஐ துணை போவதாகவே இந்த நீதிமன்றம் கருதுகிறது. பொதுமக்களை புழுவை நசுக்குவது போல் நசுக்கியுள்ளனர். இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கூட சிபிஐ விசாரிக்கவில்லை.

சுதந்திரமான விசாரணை அமைப்பின் முடிவு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது முன்கூட்டியே திட்டமிட்டதாக தெரிகிறது. ஒரு தொழிலதிபர் விரும்பியதால் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார்கள். அதற்கு போலீசார் உடந்தையாக செயல்பட்டு இருக்கிறார்கள். அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மக்கள் 100 நாள் போராட்டத்தை நடத்தியபோது அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து 7 கிமீ தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்தவர் எப்படி துப்பாக்கி சூட்டிற்கு பலியாகி இருக்க முடியும். இதையெல்லாம் சிபிஐ ஏன் விசாரணைக்குள் கொண்டு வரவில்லை என்று கடும் கண்டனம் தெரிவித்தனர். அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சீனிவாசன், சிபிஐ தாக்கல் செய்த இறுதி அறிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்கவில்லை. மறுவிசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையையும் ஏற்கவில்லை.

வழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படி சிபிஐ மீது குற்றம்சாட்ட முடியும் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், விசாரணை முடிவில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையில் ஒருவர் பெயர் கூட சேர்க்கப்படவில்லை. ஒருவரும் குற்றவாளியாக சேர்க்கப்படாத நிலையில் யாருக்கு எதிராக வழக்கு நடத்துவீர்கள் என்று சிபிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தொடர்ந்து நீதிபதிகள், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் பெயர்களில் துப்பாக்கி சூடு நடந்த சம்பவத்திற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சொத்து விவரங்களை, சம்பவத்திற்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு உள்ள சொத்து விவரங்களை சேகரித்து 2 வாரங்களில் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.