*அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
தூத்துக்குடி : திமுக வை யாராலும் அசைத்து பார்க்க முடியாது என தூத்துக்குடியில் நடந்த தெற்கு மாவட்ட இளைஞரணி கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமையில் நடைபெற்றது. இதில், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைகள் வழங்கி பேசியதாவது: திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நடைபெறுகின்ற கூட்டத்தில் இளைஞரணியை சேர்ந்தவர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டது மகிழ்ச்சி.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் இளைஞரணியின் பங்கு அதிகம் இருக்கும் என்று பேசுவார். திமுகவில் எத்தனை அணிகள் இருந்தாலும், இளைஞரணிக்குத்தான் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் இளைஞரணி செயலாளராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அதே வழியைத்தான் பின்பற்றினார்.
உழைத்தவர்களுக்கு எந்த நேரத்தில் எந்த பதவி வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்து வழங்கியதைபோல் எதிர்காலத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உங்களுக்கு வழங்குவார். இளைஞரணி தம்பிமார்கள் பேச்சாற்றலின் மூலம் உங்களது திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமென்று முதலமைச்சர் நிர்ணயித்திருக்கின்ற இலக்கு உங்களை நம்பித்தான்.
இதை நீங்கள் புரிந்து கொண்டு எல்லாப்பகுதிகளிலும் அரசின் சாதனைகளை கொண்டு போய் சேர்க்க வேண்டும். தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படகூடாது. இளைஞரணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்பதையும் தலைமை வலியுறுத்தியுள்ளது. கட்சிக்கு எழுச்சியூட்டும் வகையில் இளைஞரணிக்கு புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும். வரும் 16, 17 ஆகிய இருதினங்களில் புதிய வாக்காளர்கள் சேர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
அதிலும் இளைஞரணி பங்கு இடம்பெற வேண்டும். நமக்கு சாதகமான வாக்காளர்களை சேர்க்க வேண்டும். அடித்தட்டு மக்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுத்து, திமுகவை வழிநடத்திய கலைஞர் வழியை முதலமைச்சர் ஸ்டாலின் பின்பற்றி வருகிறார். அதன் வழியே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கடைபிடித்து வருகிறார். திமுகவை எந்த கொம்பனாலும் அசைத்து பார்க்க முடியாது. அடித்தளம் அந்த அளவிற்கு அமைக்கப்பட்டு பலமான இயக்கமாக இருந்து வருகிறது. வரும் 13ம் தேதி மாலை புதூர்பாண்டியாபுரம் டோல்கேட் பகுதிக்கு துணை முதலமைச்சராக பதவியேற்ற பின் முதல் முறையாக வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு எழுச்சி மிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது. சக்தி வாய்ந்த தலைவரை வரவேற்க அதிகளவில் திரண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், சண்முகையா எம்எல்ஏ, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் டேவிட் செல்வின், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட துணைச்செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், ஜெபதங்கம் பிரேமா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மிக்கேல் அருள் ஸ்டாலின், பாலமுருகன், சுதாகர், குமார் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, புதூர் சுப்பிரமணியன், மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளர் ரெங்கசாமி, தொழிலாளர் அணி அமைப்பாளர் ரகுராமன், வழக்கறிஞர்கள் கிருபாகரன், பூங்குமார் மற்றும் கபடி கந்தன், கப்பிக்குளம் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பால்துரை நன்றி கூறினார்.


