Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தூத்துக்குடி மாவட்டத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை குறைந்தது

நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பிற்பகலுக்கு பிறகு குறைவான மழையே காணப்படும் நிலையில், பொதுமக்கள் சகஜவாழ்க்கைக்கு திரும்பினர். 3 தினங்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மழை தூறி கொண்டிருக்கும் நிலையில், கனமழை எச்சரிக்கை நீடிக்கிறது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கை கடல் பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டியது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. நெல்லை மாநகரில் வண்ணார்பேட்டை, டவுன் மற்றும் தச்சநல்லூர் பகுதிகளில் தண்ணீர் இன்னமும் முழுமையாக வடியாத நிலையிலும், நேற்று பிற்பகலுக்கு பின்னர் மழை இல்லை. இருப்பினும் வானம் மேகமூட்டத்தோடு, குளிரும் வாட்டி வதைப்பதால் எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற சூழல் நிலவுகிறது.

இந்தியாவிலே அதிக மழையை பெறும் நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் நேற்று ஓரளவுக்கு மழை காணப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நேர நிலவரப்படி மழை அளவு விபரம்: ஊத்து 147 மிமீ, நாலுமுக்கு 165 மிமீ, காக்காச்சி 143 மிமீ, மாஞ்சோலை 132 என மழை காணப்பட்டது. நகர்புற பகுதிகளை பொறுத்தவரை பாபநாசம் 31, மூலைக்கரைப்பட்டி 20, சேர்வலாறு 18, அம்பாசமுத்திரம் 17, நாங்குநேரி 15, மணிமுத்தாறு 14, ராதாபுரம் 13, கன்னடியன் அணைக்கட்டு 11, நம்பியாறு 10 மிமீ மழை பெய்திருந்தது. நெல்லை, பாளையில் நேற்று எதிர்பார்த்த மழை இல்லை.

தென்காசி மாவட்டத்திலும் நேற்று பெரிய அளவில் மழை இல்லை. அதிகபட்சமாக கடனா அணை 25 மிமீ, ராமநதி அணை 10, குண்டாறு 8, கருப்பாநதி 5, செங்கோட்டை 4, ஆய்குடி மற்றும் தென்காசி தலா 2மிமீ, சங்கரன்கோவில் 1 மிமீ மழை பெய்திருந்தது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பிற்பகலுக்கு பின்னர் மழை இல்லாத காரணத்தால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சோடு, சகஜ வாழ்க்கைக்கு திரும்பினர். 3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சற்று விதிவிலக்காக நேற்றும், இன்றும் அங்கு தொடர்ச்சியான மழையை பெற்று வருகிறது. இன்று அதிகாலை வரை சாயர்புரம், காயல்பட்டினம், ஏரல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, உடன்குடி சுற்றுவட்டாரங்களில் சாரல் மழை காணப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை தொடரும் நிலையில், மழை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நேர மழை விபரம்: காயல்பட்டினம் 38 மிமீ, குலசேகரப்பட்டினம் 27, திருச்செந்தூர் 21, வைகுண்டம் 14, சாத்தான்குளம் மற்றும் சூரங்குடி தலா 13 மிமீ, வேடநத்தம் 6, வைப்பாறு 4, எட்டயபுரம் 3, கீழ அரசடி 2 மிமீ மழை பெய்திருந்தது.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 131.95 அடியாக உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 149.51 அடியை எட்டியுள்ளது. இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 9 ஆயிரத்து 266 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 12 ஆயிரத்து 480 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 106.27 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 4972 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து 4305 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 59.70 அடி கொண்ட கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 52.50 அடியாக உயர்ந்துள்ளது. மலைப்பகுதியில் தொடரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், தாமிரபரணி ஆற்றில் அதிகமாக தண்ணீர் இன்றும் செல்கிறது. கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பெரும்பாலான குளங்கள், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பால் கிணறுகளில் தண்ணீர் இருப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. நெல்லை, தூத்துக்குடி வழக்கமாக கை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இவ்வாண்டும் கை கொடுத்த வண்ணம் உள்ளது.