Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் சிஎஸ்ஆர் நிதி மூலம் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் தீவிரம்

*விவசாயிகள் மகிழ்ச்சி

கோவில்பட்டி : தூத்துக்குடி மாவட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் சிஎஸ்ஆர் நிதி மூலம் நீர்நிலைகளை தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் உள்பட 12 வட்டாரங்கள் உள்ளன. புதூர் வட்டாரத்தில் 44 ஊராட்சிகளும், விளாத்திகுளம் வட்டாரத்தில் 48 ஊராட்சிகளும் உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு கடைகோடியில் புதூர், விளாத்திகுளம் பகுதி கரிசல் மண் உடைய நிலங்கள் ஆகும். இங்குள்ள மானாவாரி நிலங்களில் பெரும்பாலும் பயறுவகைகள், பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள், மூலிகை வித்துக்கள், பணப்பயிர்கள் பயிரிடப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் ஊரணி, குட்டைகள், சிறு பாசன கண்மாய், நீர்வளத்துறை பாசன கண்மாய் என உள்ளன.

கடந்த காலங்களில் விவசாயிகள் கோடை காலங்களில் தங்கள் நிலங்களுக்கு வேண்டிய வண்டல் மண்ணை நீர்நிலைகளில் இருந்து ஆழப்படுத்தி வெட்டி எடுத்து செல்வார்கள். இதனால் மழைக்காலங்களில் ஆழப்படுத்தப்பட்ட பகுதிகளில் பரவலாக மழை நீர் சேமிக்கப்பட்டது. இதனால் கால்நடைகளுக்கு கோடையில் குடிநீர் கிடைத்தது.

இந்நிலையில் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை வழக்கமாக உள்ள நடைமுறையை மாற்றி தனி நபர் மற்றும் விவசாயிகள், அரசு நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுப்பதற்கு அரசு அனுமதி பெற வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அரசு அறிவித்தது.

இதனால் விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆண்டுதோறும் அரசு நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி வழங்கி வருகிறது. இதனிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நீர்நிலைகள் தூர்வாரப்படாததால் மழைகாலங்களில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமிக்க முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாரப்படாத நீர்நிலைகளின் விவரங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பெற்று மாவட்ட கலெக்டரிடன் ஒப்புதலோடு புதூர், விளாத்திகுளம் பகுதியில் உள்ள ஊரணிகள், சிறுபாசன குளங்களில், தனியார் கார்ப்பரேட் நிறுவனம் வேலி கருவை மரங்கள் அகற்றி, நீர் நிலைகளை தூர்வாரி வருகிறது.

பல ஆண்டுகளாக தூர்ந்து, பராமரிக்கப்படாமல், உள்ள நீர்நிலைகள் தூர் வாரப்பட்டு கரை பலப்படுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவைதவிர ஆண்டுதோறும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் மக்களால் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டாலும் அவை பெயரளவிலேயே செய்யப்படுகின்றன. இதனால் பெருமளவில் மழைநீர் தேக்க முடியவில்லை.

அவற்றிலும் வேலிக்கருவை மரங்கள் அடர்ந்து காட்டுப்பன்றிகள் பதுங்கியுள்ளன. காட்டுப்பன்றிகளை விரட்டவும், முறையாக ஆழப்படுத்தி மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரை சேமிக்க நூறு நாட்கள் வேலை திட்டத்தில் செய்யப்பட்ட நீர்நிலைகளையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது சிஎஸ்ஆர் நிதியில் தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.