Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தூத்துக்குடியில் 1000 ஆண்டு பழமையான வணிக நகரம் கண்டுபிடிப்பு: நெல்லை பல்கலை. தொல்லியல் துறை ஆய்வில் தகவல்

நெல்லை: தூத்துக்குடியில் 1000 ஆண்டுகளுக்கு முன்பே வணிக நகரம் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல்துறை பேராசிரியர்களின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது. தூத்துக்குடியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பட்டினமருதூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பண்டைய பொருட்கள் பொதுமக்களாலும், தொல்லியல் ஆர்வலர்களாலும் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் பட்டினமருதூர் உள்ளிட்ட இடங்களில் கடல்வாழ் படிமங்கள், பழங்கால புதையல்கள் தொடர்பாக விரிவான ஆய்வு செய்ய வேண்டும் என இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் இயக்குனருக்கும், இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குனருக்கும் கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் (பொ) சுதாகர் தலைமையில் தொல்லியல் நிபுணரும், பேராசிரியருமான மதிவாணன், தொல்லியல் மாணவி மீனா, கடல்சார் உயிரியல் ஆய்வாளர் முனியாண்டி பாலு, தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் ஆகியோர் அந்த பகுதியில் மேற்பரப்பு களஆய்வு செய்தனர்.ஆய்வு குழுவினர், அங்குள்ள நூலகத்தில் இருந்து மண் சாலையில் சென்ற போது பழங்கால பானை ஓடுகள் மற்றும் சுடுமண் பொம்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. தொல்லியல் நிபுணரும், பேராசிரியருமான மதிவாணன் இவை 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என கணித்தார்.

அந்தப் பகுதியில் சங்குகள் மற்றும் வட்டமான கருங்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சங்கில் இருந்து வளையல்கள் தயாரிக்கும்போது பயன்படுத்திய கற்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என பேராசிரியர் மதிவாணன் கூறினார். அதற்கு அருகில் பித்தளை அல்லது தங்கக் கலவை நாணயம் ஒன்றும் மீட்கப்பட்டது. நாணயம் தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது.பட்டினமருதூரில் உள்ள இந்தக் பகுதி கடலோரத்திலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் உள்ளது. சீனக் களிமண் பானைகள், சங்குகள், நாணயங்கள் கிடைத்ததன் அடிப்படையில், ஒரு காலத்தில் இங்கு பல நாட்டுப் பொருட்கள் கடல் வழியாக வந்து இறங்கியதற்கான ஆதாரங்கள் இவை என்கின்றனர் தொல்லியல் பேராசிரியர்கள்.

தூத்துக்குடியின் தெற்கே சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள கொற்கையின் வரலாறு நன்கு அறியப்பட்டதே. அதன் வடக்கே 15 கிமீ தொலைவில் இருக்கும் பட்டினமருதூரும், அதேபோன்று வரலாற்றுச் சிறப்பை உடைய கடற்கரை வணிக நகரமாக இருந்திருக்கலாம் என தொல்லியல் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாட்டின் நீண்ட மற்றும் வளமான வரலாற்றுக்கு மற்றுமொரு சான்றாக, இந்த ஆய்வு அமைந்துள்ளது. பட்டினமருதூரில் வெளிக்கொணரப்பட்டிருக்கும் தடயங்கள், வெறும் தொல்பொருட்கள் மட்டுமல்ல; அவை நமது முன்னோர்களின் உலகளாவிய வர்த்தகத் தொடர்புகள், அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் அன்றைய புவியியல் அமைப்பு குறித்த ஆழமான புரிதல்களை வழங்கும் காலப் பெட்டகங்களாகும் என்கின்றனர் தொல்லியல் பேராசிரியர்கள்.

பட்டினமருதூரில் வணிகர்களின் ஆரவாரத்தையும், ஒரு பழம்பெரும் நாகரிகத்தின் துடிப்பையும் தமக்குள் பொதிந்து வைத்திருக்கும் விலைமதிப்பற்ற சான்றுகள் கிடைத்துள்ளது எனவும், இந்த வரலாற்றுப் தொல்பொருட்களை பாதுகாத்து, விரிவான ஆய்வுக்கு உட்படுத்துவதே, நமது பெருமைமிகு கடந்த காலத்தை எதிர்காலத் தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதற்கு நாம் செய்ய வேண்டிய அவசரப் பணியாகும் எனவும் தொல்லியல் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.