திருவொற்றியூர்: திருவொற்றியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேங்கி நின்ற மழைநீரை அகற்றினர். சென்னையில் சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுமார் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மாணவ, மாணவிகள், வகுப்பறைகளுக்கு செல்லமுடியாமல் சிரமப்பட்டனர். இந்த நிலையில், வார்டு கவுன்சிலர் கே.பி. சொக்கலிங்கம் தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் வந்து ராட்சத மோட்டார் பொருத்திய 2 டிராக்டர் வண்டிகளை கொண்டு சுமார் 6 மணி நேரமாக நடவடிக்கை எடுத்து பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீரை முற்றிலும் அகற்றினர்.
இதுபோல், எண்ணூர் விரைவு சாலை வடக்கு பாரதியார் நகரில் மழைநீருடன் கடல்நீரும் கலந்து சாலையில் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் வந்து ராட்சத மோட்டார் மூலம் சாலையில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். திருவொற்றியூர் மண்டலத்தில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி மழை நீரை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதற்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.