Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழாவையொட்டி மகா ரதம் சீரமைப்பு பணி நிறைவு: 8ம்தேதி வெள்ளோட்டம்-கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு மகா ரதம் சீரமைப்பு பணி முடிந்து வரும் 8ம் தேதி வெள்ளோட்டம் விடப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, டிசம்பர் 4ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். நிறைவாக டிசம்பர் 13ம்தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலைமீது மகா தீபமும் ஏற்றப்படும்.

தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளன்று பஞ்சரத பவனி (தேர் திருவிழா) நடைபெறும். அன்று ஒரே நாளில் 5 தேர்கள் அடுத்தடுத்து மாடவீதியில் பவனி வரும். இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், மகா ரதம் எனப்படும் பெரிய தேர், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவற்றை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி அருள்பாலிக்கும் பெரிய தேர் எனப்படும் மகா ரதம் சீரமைப்பு பணி தற்போது முழுமை அடைந்துள்ளது. தேரடி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மகா ரதத்தை, கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேற்று மாலை பார்வையிட்டார்.

அப்போது, டிஆர்ஓ ராமபிரதீபன், கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ரா.ஜீவானந்தம், அறங்காவல் குழு உறுப்பினர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர். அதைத்தொடர்ந்து கலெக்டர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவில், 7ம் நாளான டிசம்பர் 10ம்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அதையொட்டி, மகாரதம் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. மகா ரதம் சுமார் 59 அடி உயரம், 200 டன் எடை கொண்டது. தேரில் மொத்தம் 470 சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் தேர்யாழி, சிம்மயாழி, கெடியாழி, பிரம்மா சிலை, துவாரக பாலகர்கள் சிலை உட்பட 203 மரச்சிற்பங்கள் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் இறையாசனம், சிம்மாசனம், அலங்கார தூண்கள் ஆகியவை முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளன. உயர்தர தேக்கு, ரோஸ் வுட் மற்றும் வேங்கை ஆகிய மரங்களால் தேர் சீமைப்பு பணி நடைபெற்று உள்ளது. தேரின் அலங்காரத் தூண்கள், இறையாசனம் உள்ளிட்ட பகுதிகள் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டுள்ளன. தேர் சீரமைப்பு பணி முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 8ம் தேதி மாடவீதியில் மகா ரதம் வெள்ளோட்டம் விடப்படுகிறது.

மேலும், விநாயகர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவற்றின் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும், வழக்கம் போல தீபத்திருவிழாவில் பவனி வரும் மற்ற தேர்களின் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.