Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் ரூ.73 கோடியில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி மற்றும் கிரிவல பாதை மேம்படுத்துதல்: அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு தலைமையில் ஆய்வு

சென்னை: திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் கோயிலில் ரூ.73 கோடி மதிப்பீட்டில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் கிரிவலப் பாதையை மேம்படுத்துதல் குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் ஆணையர் அலுவலகத்தில் 2024-2025ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பின் படி, ரூ.83 கோடி மதிப்பீட்டில் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் கிரிவலப் பாதையை மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்களும் பவுர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தும் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வகையில் பெருந்திட்ட வரைவின் கீழ் ரூ.36.41 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது, “திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ஏதுவாக ரூ.23 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்” எனவும், “கோயிலில் பக்தர்களின் வசதிக்காக புதியதாக பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்” எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் அரசுக்கு சொந்தமாக 15 இடங்களில் கழிவறைகள் மற்றும் குளியலறைகள் ஏற்படுத்துதல் மற்றும் 2 இடங்களில் 7 பக்தர்கள் இளைப்பாறும் கூடங்கள் அமைத்தல், ரூ.50 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி - 2 அமைத்தல் போன்றவை குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் விளக்கி கூறப்பட்டது.

இக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நாம் நல்லமுறையில் செய்து தந்திட வேண்டும். கிரிவலப்பாதையில் அமைக்கப்படும் கழிவறைகள் மற்றும் குளியலறைகளின் உயரம் சுமார் 13 அடி உயரம் கொண்டதாகவும், நல்ல காற்றோட்டத்துடன் சர்வதேச தரத்தில் அமைக்கப்படுவதோடு, அதற்கான அணுகு சாலை கலைநயத்துடன் செம்மையாக அமைக்கப்பட வேண்டும். பக்தர்கள் தங்கும் விடுதியானது நீரூற்றுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டதாக இருந்திட வேண்டுமெனவும், இது குறித்த விரிவான திட்ட அறிக்கையினை உடனடியாக தயார் செய்து பணிகளை விரைவுபடுத்திட அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் சுகுமார், ஹரிப்ரியா, தலைமைப் பொறியாளர் பெரியசாமி, கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் ஜோதி, அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.