திருவள்ளூர் அருகே டேங்கர் ரயில் தீ விபத்தை தொடர்ந்து பயணிகள் வசதிக்காக 265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து ரயில் சேவை பாதிக்கப்பட்டு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பாக காட்பாடி, குடியாத்தம், அரக்கோணம், திருவள்ளூர், மற்றும் திருத்தணி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து மாலை 04:00 மணி நிலவரப்படி 265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக, பயணிகள் வசதிக்காக திருவள்ளூர் பேருந்து நிலையம் - ஆவடி மற்றும் திருவள்ளூர் பேருந்து நிலையம் - பூந்தமல்லி இடையே பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக தற்போது வரை தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 60 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர் சரக்கு ரயில் தடம் புரண்டு தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் 60 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழு சுமார் 7 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 18 டேங்கர்கள் முழுமையாக எரிந்த நிலையில் மேலும் ஒரு டேங்கரில் தீப்பிடித்துள்ளது.
12 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் தொடர்ந்து வருகிறது. டேங்கரில் உள்ள பெட்ரோலிய பொருட்களை லாரிகளுக்கு மாற்றும் பணி நடைபெற்றுவருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. டேங்கரிலிருந்து டீசலை முழுமையாக் லாரிகளுக்கு மாற்றிய பிறகே பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெறும். தற்போதுவரை ஒரு டேங்கர் கூட அப்புறப்படுத்தப்படாததால் இரவு முழுவதும் மீட்பு பணி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.