Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடவுள்கள் சரிதான்... சில மனிதர்கள் சரியில்லை திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தம்: தொல்லியல்துறைக்கு சொந்தமல்ல; ஐகோர்ட் மதுரை கிளை கருத்து

மதுரை: திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது. தொல்லியல் துறைக்கு சொந்தமானது என்பதை ஏற்க முடியாது என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரையைச் சேர்ந்த கண்ணன், முத்துகுமார் உள்ளிட்ட சிலர் தனித்தனியே, ஐகோர்ட் மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் மலையை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு தடை விதிக்க வேண்டும். சமணர் குன்று மலை என அறிவிக்க வேண்டும் என்றும், சிக்கந்தர் மலையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். சிக்கந்தர் பாதுஷா தர்கா புதுப்பிக்கும் பணிக்கு காவல்துறை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் கூறப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மதுரை கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஒற்றுமையே பலம் என்பதால் தமிழ்நாடு அரசு அனைத்து மதத்தினருக்கும் இடையே ஒற்றுமையை பேண விரும்புகிறது. இதுதொடர்பாக நடந்த கூட்டத்தில் இரு சமூகத்தினருக்கும் ஏற்கனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும், தங்களுடைய இந்த நடைமுறையில் வெளிநபர்கள் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் எனவும் ஒரு மனதாக முடிவு செய்து தெரிவித்தனர். அதோடு இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிற சமயத்தை சேர்ந்தவர்களும் இதுபோல் வேண்டுதல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து பரிமாறுவது வழக்கமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒன்றிய அரசின் தொல்லியல்துறை தரப்பில், வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.

இதைத்தொடர்ந்து அரசுத் தரப்பில், திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் எழுந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு விட்டது என தெரிவிக்கப்பட்டது. இதை, தொல்லியல் துறை தரப்பில் ஏற்க மறுத்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை தொல்லியல் துறைக்கு சொந்தமானது என்பதால், அங்கு எதைச் செய்தாலும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள், கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள் தான் சரியாக இல்லை. மலை தங்களுக்கு சொந்தமானது என்று தொல்லியல் துறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மலை அனைவருக்கும் சொந்தமானது என தெரிவித்தனர். தொடர்ந்து நீதிபதிகள், தொல்லியல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும், திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக ஏற்கனவே உள்ள உத்தரவுகளைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை ஏப்.7க்கு தள்ளி வைத்தனர்.