அண்ணாநகர்: திருமங்கலம் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில், கடந்த சில நாட்களாக பொருட்கள் மாயமானது தெரியவந்தது. இதனால், கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், மளிகை பொருள் வாங்க வந்த ஒருவர், விலை உயர்ந்த பொருட்களை திருடி செல்வது தெரியவந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அந்த நபர், மீண்டும் இந்த கடைக்கு வந்து, மளிகை பொருட்களை வாங்குவது போல், விலை உயர்ந்த பொருட்களை திருடியுள்ளார். அவரை, கடை ஊழியர்கள் மடக்கி பிடித்து, திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஏசி மெக்கானிக் ராகேஷ் (24) என்பதும், இவர் கடந்த 10 நாட்களாக சூப்பர் மார்க்கெட்டில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்களை திருடியதும், அதனை குறைந்த விலையில் விற்பனை செய்து மது அருந்தி உல்லாசமாக இருந்து வந்ததாகவும் தெரியவந்தது.
அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.