*நகர்மன்ற தலைவர் ஆய்வு
திருச்செங்கோடு : திருசெங்கோட்டில் நேற்று முன்தினம் மாலை பெய்த கன மழையால், சேலம் ரோடு ஸ்டேட் பேங்க் அருகே கழிவுநீர் கால்வாயில் மழை நீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டது. இதனால் மழை நீர் சாக்கடை நீருடன் கலந்து ரோட்டில் ஆறு போல் ஓடியது.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு அந்த பகுதியில் ஆய்வு செய்தார்.
கழிவு நீர் கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கோழி இறைச்சி கழிவுகள், தெர்மாகோல் போன்றவை மூட்டை மூட்டையாக அதிக அளவில் கொட்டப்பட்டு இருந்ததால், அனைத்து கழிவு நீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததை பார்வையிட்டு, நகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு அடைப்புகளை நீக்கும் பணியை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தீவிரப்படுத்தினார். துப்புரவு அலுவலர் சோலைராஜ் தலைமையில் தூய்மை பணியாளர்கள் இந்த பணியை மேற்கொண்டனர்.
சாக்கடைகளில் பொதுமக்கள் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்ட வேண்டாம். தூய்மை பணியாளர்கள் தங்களது பகுதிகளுக்கே வந்து குப்பைகளை பெற்று கொள்வார்கள். க்கடைகளில் குப்பைகளை கொட்டுவதால் கழிவு நீர் மழை நீர் செல்ல முடியாமல் தேங்கி ரோட்டில் ஓடும் நிலை ஏற்படுகிறது.
இந்த வேண்டுகோளை ஏற்காமல் குப்பைகளை யாராவது சாக்கடையில் கொட்டுவதை அறிந்தால், யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார். இந்த பணியின் போது, நகர மன்ற உறுப்பினர்கள் மனோன்மணி சரவணன், முருகன், தாமரைச்செல்வி மணிகண்டன், ரவிக்குமார், ரமேஷ், திவ்யா, வெங்கடேஸ்வரன், செல்லம்மாள், தேவராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.