இந்த முறை ஜெயிக்க முடியுமா என பெரும் தவிப்பில் இருக்கும் தெர்மாகோல் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘சேலத்துக்காரர் தங்களுக்கு பதிலாக மூன்றாவது நபரிடம் ஓவரா பாசம் காட்டுவதை பார்த்து மாஜிக்கள் இரண்டு பேர் தனித்தனியாக புலம்பிக்கிட்டு இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பூட்டுக்கு புகழ் பெற்ற மாவட்டத்தில் மேற்கு பகுதிக்கு மாஜி மந்திரியான உளறல்காரர், கிழக்கு பகுதிக்கு மாஜி ஷாக் மந்திரியானவர் பொறுப்பில் இருக்காங்க.. இருவரும் சேலத்துக்காரருக்கு தீவிர சப்போர்ட். மாஜி ஷாக் கூட இடையில் பலாப்பழக்காரரோடு நெருக்கமாக இருந்தார். அதனால் எந்தப் பயனும் இல்லையென கருதியதும் விலகி சேலத்துக்காரருடன் கைகோர்த்தார். தற்போது, இருவரையும் சேலத்துக்காரருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. இவர்களின் மாவட்ட செயல்பாடுகளில் போதிய திருப்தி இல்லையாம்.. இதனால் இங்கு மூன்றாவதாக ஒரு நபரை வளர்த்துவிட வேண்டுமென்பதில் ரொம்பவே குறியாக இருக்கிறாராம் சேலத்துக்காரர்.. இதனால், வேடன் ெபயரில் துவங்கும் தொகுதியின் மாஜி எம்எல்ஏவான டாக்டரை எங்கு சென்றாலும் உடன் அழைத்துச்சிட்டு போறாராம்.. அவரும் அவ்வப்போது பூட்டு மாவட்டம் மட்டுமின்றி, மற்ற மாவட்ட பஞ்சாயத்துகளையும் தலைமையிடம் புட்டு புட்டு வைக்கிறாராம்.. சமீபத்தில் வெயிலுக்கு பெயர் போன மாவட்டத்தில் நடந்த மண்டல மாநாட்டில் இவரது பங்கு அதிகம் இருந்ததாம்.. இது சமூக நெருக்கம்தான்.. வேறொன்றுமில்லை. அதனால் சேலத்துக்காரர் ஓவர் பாசம் காட்டுகிறார் என பூட்டு மாவட்ட இலைக்கட்சியினரே பேசிட்டு வர்றாங்க.. சேலத்துக்காரர் டாக்டரிடம் அதிக நெருக்கம் காட்டுவது, மாஜிக்கள் இருவருக்கும் மிகுந்த குடைச்சலை கொடுத்துள்ளதாம்.. வருங்காலத்தில் நமக்கு இடைஞ்சலாக இருப்பாரோன்னு இருவரும் தனித்தனியாக புலம்ப ஆரம்பித்து விட்டனராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சுற்றுலா பூமியில் செம்மண் கடத்தப்பட்ட சம்பவம் உள்ளூர்வாசிகளை அதிர்ச்சி அடைய செய்திருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புரம் பெயர் கொண்ட மாவட்டத்தில் சுற்றுலாவை கவர்ந்த சர்வதேச நகரம் இருக்கு.. ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்ட பரந்து விரிந்த செம்மண் பூமியான இது காடுகள் நிறைந்த பகுதி என்பதால் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு வருகிறதாம்.. இங்குள்ள மந்திர் இடத்தில் அனுமதியின்றி ஒரு கும்பல் மணல் எடுத்து தனியார் இடத்தில் குவித்ததாம்.. அரசல் புரசலாக இது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளின் கண்களில் படவே மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் பறந்திருக்கு.. இதன் எதிரொலியாக, காக்கிகளுடன் இணைந்து அப்பகுதிகளை வருவாய் அதிகாரிகள் ஓரிரு தினமாக ரகசியமாக நோட்டமிட்டார்களாம். அப்போது அனுமதி பெறாமலே பொக்லைன் மூலம் சுரண்டி, டிராக்டரில் ஏற்றி செம்மண் கடத்திய கும்பலை சுற்றி வளைத்த வருவாய் துறை, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி விட்டார்களாம்.. இருமாநில அதிகாரமிக்க நிர்வாகிகள் சங்கமிக்கும் பகுதியிலே இதுபோன்ற சம்பவம் அரங்கேறியது உள்ளூர்வாசிகளை அதிர்ச்சி மற்றும் அதிருப்தியடைய செய்து இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாங்கள் கொடுத்த புகார் மீது தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாற்றுக்கட்சிக்கு செல்ல குக்கர்கட்சிக்காரங்க முடிவு செய்திருக்காங்களாமே..’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மன்னர் மாவட்டத்திற்கு சமீபத்தில் வந்த டிடிவியிடம் அந்த மாவட்ட நிர்வாகிகள் புகார்கள் அளித்தாங்களாம்.. ஆனால், அந்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட நிர்வாகிகள் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளார்களாம்.. அதில் சிலர் மாற்று கட்சிக்கு போக திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கு.. வீரமானவர் அமமுக மாவட்ட செயலாளர் கட்சி பணிகள் எதையும் கண்டுகொள்வதே இல்லையாம்.. தலைமை சொன்ன பணிகளை கூட இவர் ஒழுங்காக செய்வதில்லையாம்.. நேரடியாக சென்றாலும் எதையும் காது கொடுத்து கேட்பதில்லையாம்.. இதனால் ஆத்திரமடைந்த சில நிர்வாகிகள் அவமானப்பட்டு, அடிபட்டு இவர்களுக்கு உறுதுணையாக இருந்தால் கண்டுகொள்ள மறுக்கின்றனராம்.. இப்படி இருந்தால் எப்படி அரசியல் செய்வது என்று புலம்பிவிட்டு சிலர் மாற்று கட்சியை நாடி செல்ல முடிவு செய்துள்ளதாக கட்சியினர் சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மூன்று முறை ஜெயிக்க வைத்த மக்கள் இந்த முறை காலை வாரிவிடுவாங்களோ என அச்சத்தில் இருக்கிறாராமே தெர்மாகோல்காரர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகரில் இலைக்கட்சியின் தெர்மாகோல்காரரை மும்முறை ஜெயிக்க வைத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை என தொகுதி மேற்கு பகுதி மக்கள் புலம்ப தொடங்கி இருக்காங்களாம்.. தவிர, உள்ளடி வேலைகளும் ஜோராக நடக்கிறதாம்.. இது தெர்மாகோல்காரரை அச்சத்திற்கு ஆளாக்கி, பதற வைத்து, வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்திருக்கிறதாம்.. தொகுதிக்குள் நடந்த கூட்டத்தில், ‘யாருக்கும் பயப்படமாட்டோம்.. வட்டச் செயலாளரும் ஜெயிப்பாரு... இது எங்க கோட்டை..’ என்று ஆவேசத்துடன் பேசினாலும், உள்ளடி வேலைகள் இம்முறை காலைவாரி விடுமோ என்ற அச்சத்தில்தான் இருக்கிறாராம்.. தனக்கான ஆதரவு குறைவதால் அச்சம் மேலோங்க எங்கு போனாலும் தெர்மாகோல்காரரிடம் பெரும் பதற்றத்தையே பார்ப்பதாக கட்சித் தொண்டர்களும் காதுபட பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சி தொண்டருங்க குழப்பத்தில் தவிப்பது ஏன்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா
‘‘மாங்கனி மாவட்டத்தில் மலராத கட்சியின் குழப்பமான நடவடிக்கைகள், தொண்டர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை தொடர்ந்து கிளப்பிக்கிட்டே இருக்காம். பக்கத்தில் உள்ள முட்டை மாவட்டத்துக்காரரு தான், ஸ்டேட் டெபுடி லீடராக இருக்காராம். அடிக்கடி ஒரு சில இடங்களில் கூட்டமும் போடுறாராம். ஆனால் பெரும்பாலான நிர்வாகிகள், இதை ஒரு பொருட்டாவே எடுத்துக்கொள்வதில்லையாம். சில மாதங்களுக்கு முன்பு நிர்வாகிகளை ஒருமையில் பேசி வறுத்தெடுத்தது, ஸ்டேட் லீடர் வந்த போது சால்வை போட வந்த மூத்த நிர்வாகியை அதிரடியாக தள்ளிவிட்டது என்று, இவருடைய சேட்டைகள் தான் இதற்கு காரணமாம். இதனால் இவர், மாவட்டத்தில் எந்த பகுதிக்கு வந்தாலும், போனாலும் யாரும் பெருசா அலட்டிக்கொள்வதில்லையாம். பார்ட்டி சார்ந்த மீடியா குரூப்பில் கூட, தகவல் தெரிவிப்பதில்லையாம். இது ஒருபுறமிருக்க, ஸ்டேட் லெவல் நிர்வாகிகள், அவ்வப்போது தலைகாட்டுறாங்களாம். அவுங்க மீடியாவை சந்திப்பாங்க என்று தகவல் வருமாம். ஆனால், இப்படி அறிவிக்கப்பட்ட பல மீடியா மீட்டுகள் திடீரென கேன்சல் ஆகிவிடுமாம். இதுபோன்ற குழப்பங்களால் நொந்து போயிருக்காங்களாம் மலராத கட்சியின் தொண்டருங்க..’’ என்றார் விக்கியானந்தா.