Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தேனீர்குளம் விவசாய நிலத்தில் கழிவுநீர் கலப்பு மழைக்காலங்களில் தண்ணீரில் மிதக்கும் தொம்மை மிக்கேல்புரம்

*மாநகராட்சி குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு

நெல்லை : நெல்லை மாநகராட்சி மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. உதவி கமிஷனர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் மேலப்பாளையம் பகுதி செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட குழு உறுப்பினர் இசக்கிமுத்து, இடைக்கமிட்டி உறுப்பினர்கள் ஈஸ்வரன், சதக், முத்து, கிளை செயலாளர்கள் கடற்கரை, மீனாட்சி சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் மேயரிடம் அளித்த மனுவில், ‘‘மேலப்பாளையம் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

43வது வார்டுக்கு உட்பட்ட அழகிரிபுரம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை தொடங்கிட வேண்டும். பணிகள் முடிந்த பகுதியில் புதிய சாலைகளை உடனே போட வேண்டும். மேலகுலவணிகபுரம் பகுதியில் உள்ள மக்களுக்கு ஈம கிரியைகள் செய்யவும், நீர் மாலை எடுக்கவும், நொண்டி பாலம் அருகே நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.’’ என அம்மனுவில் தெரிவித்திருந்தனர்.

நெல்லை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், தொம்மை மிக்கேல்புரம் ராஜ் ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,‘‘மேலப்பாளையம் மண்டலம் 43வது வார்டு பகுதிக்கு உட்பட்ட குறிச்சி தொம்மை மிக்கேல்புரத்தில் 300 வீடுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர்.

இச்சாலையில் இருபுறமும் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அங்குள்ள 10 அடி அகல ஓடையில் கழிவுநீர் மழை நீர் அனைத்தும் அந்த ஓடை வழியாக பாளையங்கால்வாயில் கலந்து வந்தது. கடந்த ஆண்டு மழைக்காலத்தில் ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் செல்ல முடியாமல் தொம்மை மிக்கேல்புரம் மழை நீரில் மிதந்தது.

தற்போது மழைக்காலம் நெருங்கிவிட்ட நிலையில் பைபாஸ் சாலையின் ஓரமுள்ள ஓடை சுருங்கி குப்பைகளாலும் கழிவுநீராலும் பாதிக்கப்பட்டு வருகிறது. பல பகுதிகளில் ஓடையில் தண்ணீர் செல்ல வழி இல்லை. எனவே மழைக்காலத்திற்குள் இந்த ஓடையை தூர்வாரி குப்பைகளை அகற்றி மழைநீர் தங்கு தடை இன்றி செல்ல வழிவகை செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.’’ என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாநகராட்சி 11வது வார்டு கவுன்சிலர் கந்தன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘11வது வார்டுக்கு உட்பட்ட சிலப்பதிகார தெரு, திருகுறிப்பு தொண்டர் தெரு, எட்டுத்தொகை உள்ளிட்ட தெருக்களில் போதிய தெருவிளக்குகள் வசதி இல்லை. அங்கு கூடுதல் தெருவிளக்குகளை அமைத்து தர வேண்டும்.’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமையன்பட்டி இனாம்தேனீர்குளம் பகுதி மக்கள் ஜெயலட்சுமி தலைமையில் மேயரிடம் அளித்த மனுவில், ‘‘எங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் பாசன நிலம் ராமையன்பட்டி மோகமுடையார்குளம் அருகில் இருந்து வருகிறது.

இங்கு நெல், உளுந்து உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வருகிறோம். எங்கள் பகுதி மக்களுக்கு விவசாயமே ஜீவாதாரமாக உள்ளது. இந்நிலையில் நெல்லை மாநகராட்சியின் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கழிவுகள் எங்கள் விவசாய நிலத்திற்குள் பாய்வதால், பயிரிட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாதாள சாக்கடை நீரானது வயல்களுக்கு புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.