இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணப்பெண் மாயமாகி காதலனுடன் டும்டும்டும்: மண மாலையுடன் வாட்ஸ் அப்பில் போட்டோக்களை அனுப்பினார்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில், மணப்பெண் வீட்டில் இருந்து மாயமாகி காதலனை திருமணம் செய்து அந்த ேபாட்டோவை வாட்ஸ் அப்பில் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்தார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஷைனி பிரியா (30). கோவையில் உள்ள தனியார் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், இரணியல் பகுதியை சேர்ந்த இன்ஜினியருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணத்துக்கு ஷைனி பிரியாவும் சம்மதம் தெரிவித்தார். திருமண நிச்சயதார்த்தம் முதல் அனைத்து நிகழ்வுகளிலும் மகிழ்ச்சியுடன் இருந்தார். இவர்களின் திருமணம் இன்று (7ம்தேதி) தக்கலையில் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடந்தது.
ஷைனி பிரியாவும் தனது நண்பர்கள், தோழிகளுக்கு அழைப்பிதழ்கள் கொடுத்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்ற மணப்பெண் ஷைனி பிரியா மாயம் ஆனார். நீண்ட நேரமாக அவர் வராததால், சந்தேகம் அடைந்து பல இடங்களில் பெற்றோர், உறவினர்கள் தேடினர். ஷைனி பிரியாவின் செல்போனை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இந்த தகவல் அறிந்து மணமகன் வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களும் பல்வேறு இடங்களில் மணப்பெண்ணை தேட தொடங்கினர். நாள் முழுவதும் தேடியும் கிடைக்காததால், நேற்று இது குறித்து மணப்பெண் சகோதரன் சஞ்சீவ் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, போலீசார் இளம்பெண் மாயம் என வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
ஷைனி பிரியாவின் செல்போன் நம்பரை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்து வந்தனர். இந்தநிலையில் இன்று காலை ஷைனி பிரியாவின் செல்போனில் இருந்து, அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு போட்டோ அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதில் வாலிபர் ஒருவருடன், ஷைனி பிரியா மணக்கோலத்தில் இருந்தார். கோயில் ஒன்றில் வைத்து இந்த திருமணம் நடந்தேறி உள்ளது. இந்த போட்டோவை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஷைனி பிரியா தனது உறவினர்களுக்கு மட்டுமின்றி, தனக்கு நிச்சயிக்கப்பட்டு இருந்த மாப்பிள்ளைக்கும், இந்த போட்டோவை அனுப்பி வைத்து மன்னிப்பு கோரி உள்ளார். ஷைனி பிரியா, வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரத்துக்கு எதிர்ப்பு இருந்ததால், அப்படியே கைவிட்டது போல் நடித்துள்ளார்.
கடைசி நேரத்தில், வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்துள்ளார் என கூறப்படுகிறது. ஷைனி பிரியா திருமணம் செய்துள்ள வாலிபர் பற்றிய விபரம், அவரது குடும்பத்தினருக்கு தெரியவில்லை. இந்த போட்டோவை போலீசாரிடம் காட்டி, தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து ெகாண்டதாக தற்போது புகார் கூறி உள்ளனர். இன்று திருமணம் நடக்க இருந்த மணப்பெண் மாயமாகி காதலனை கரம் பிடித்து வாட்ஸ் அப்பில் போட்டோவை அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


