Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

17 ஆண்டுகளாக களத்தில் பணியாற்றிய செனாப் பாலத்தின் பெண் சிங்கம் மாதவி லதா யார்..? இன்ஜினியரிங் துறையில் அபார சாதனை

புதுடெல்லி: கடந்த 17 ஆண்டுகளாக களத்தில் பணியாற்றிய செனாப் பாலத்தின் பெண் சிங்கம் மாதவி லதா குறித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஜம்மு - காஷ்மீரில் அமைந்துள்ள செனாப் பாலம், உதம்பூர்-நகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும். கடந்த 2002ல் இத்திட்டம் தேசியத் திட்டமாக அறிவிக்கப்பட்டது. இப்பாலத்தின் கட்டுமானம் 2008ல் தொழில்நுட்ப சவால்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, 2010ல் மீண்டும் தொடங்கப்பட்டது.

செனாப் ஆற்றின் மீது 359 மீட்டர் உயரத்தில் 1,315 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்திய அறிவியல் கழகத்தின் சிவில் பொறியியல் துறையில் பேராசிரியராகவும், பாறைப் பொறியியல் மற்றும் புவி தொழில்நுட்பத் துறையில் நிபுணரான மாதவி லதா, கடந்த 2005ம் ஆண்டு முதல் சுமார் 17 ஆண்டுகள் செனாப் ரயில் பாலத்தின் திட்டத்தில் பங்கேற்று ஆலோசனைளை வழங்கினார். இவர் வட இந்திய ரயில்வே மற்றும் ஒப்பந்ததாரர் ஆப்கான்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சருடன் இணைந்து இந்த பணியை மேற்கொண்டார்.

செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்ட உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தின் அடித்தளத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் அடித்தள வடிவமைப்பு ஆகியவற்றில் ஆலோசனைகளை வழங்கினார். இந்த பாலத்தின் திறப்பு விழாவின் போது, அவரது பணிகளை பாராட்டி ‘டிசைன்-ஆஸ்-யு-கோ’ என்று பலரும் அவரை வாழ்த்தினர். இந்த பாலம், காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய இணைப்பாகும்.

மேலும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மூலம் கத்ராவிலிருந்து நகருக்கு பயண நேரத்தை 3 மணி நேரமாகக் குறைத்துள்ளது. மாதவி லதாவின் பங்களிப்பு, இந்திய பொறியியல் துறையில் பெண்களின் முக்கிய பங்கை வெளிப்படுத்தியதாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டது. மாதவி லதாவின் 17 ஆண்டு கால பங்களிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மாதவி லதாவின் குழு, இமயமலையின் நில அதிர்வு மண்டலத்தில் அமைந்த இந்த பாலத்தை 8 ரிக்டர் அளவு நிலநடுக்கங்களையும், 266 கிமீ/மணி வேகத்தில் வீசும் காற்றையும், -20°C வெப்பநிலையையும் தாங்கக்கூடிய வகையில் வடிவமைத்தது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த மாதவி லதா, தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர் என்பதும், அவரது பெற்றோர் ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. குல்பர்கா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், மைசூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.